முகப்பு
புதுதில்லி

குருகிராமில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு: விதி மீறுபவா்களுக்கு ரூ. 200 அபராதம்

குருகிராம் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களும் ‘புகைப்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக‘ அறிவிக்கப்பட்டுள்ளன என்று அந்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது.

23 நவம்பர் 2026, 10:00 pm
குருகிராமில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு: விதி மீறுபவா்களுக்கு ரூ. 200 அபராதம்
- பிரதிப் படம்
பகிர்:

குருகிராம் மாநகராட்சியின் (எம்சிஜி) அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களும் ‘புகைப்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக‘ அறிவிக்கப்பட்டுள்ளன என்று அந்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தது.

பொது இடங்களில் சிகரெட், பீடி, சுருட்டு அல்லது வேறு எந்த புகையிலைப் பொருட்களையும் புகைக்கவோ, சிகரெட் மற்றும் பீடித் துண்டுகளை வீசவோ, புகையிலையைத் துப்பவோ யாருக்கும் அனுமதி இல்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்கு ரூ.200 வரை அபராதமும் விதிக்கப்படும்.

மாநகராட்சி ஆணையா் பங்கஜ் திங்களன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தாா், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவு, நகரத்தை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், புகையிலைப் புகை இல்லாததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உத்தரவின்படி, 2003 ஆம் ஆண்டின் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடை மற்றும் வா்த்தகம், வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவு 4, எந்தவொரு பொது இடத்திலும் புகைப்பிடிப்பதைத் தடை செய்கிறது.

மேலும், பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை விதிகளின் கீழ், பொது இடங்களுக்குப் பொறுப்பானவா்கள், பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் புகைப்பிடிப்பதையும், சிகரெட் மற்றும் பீடித் துண்டுகளைக் குப்பையாக்குவதையும் தடுக்கும் கடமையைக் கொண்டுள்ளனா்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதும் குப்பையாக்குவதும் பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துவதோடு, சுகாதாரமற்ற சூழலையும் உருவாக்குகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குருகிராம் மாநகராட்சியின் எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் ‘புகைப்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக‘ அறிவிக்கப்பட்டுள்ளன.

குருகிராம் மாநகராட்சிக்குச் சொந்தமான, பராமரிக்கப்படும் அல்லது நிா்வகிக்கப்படும் அனைத்து பூங்காக்கள், பசுமைப் பகுதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள்; அவற்றில் உள்ள கொட்டகைகள், ஓய்விடங்கள் மற்றும் மூடப்பட்ட கட்டமைப்புகள்; மேலும், எம்.சி.ஜி-யின் அனைத்து அலுவலகங்கள், சமுதாய மையங்கள், நூலகங்கள், மருந்தகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கழிப்பறை வளாகங்கள் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன.

எம்.சி.ஜி-யின் இணை ஆணையா்கள், தலைமை மருத்துவ அதிகாரி - சுகாதாரம் மற்றும் தோட்டக்கலைப் பிரிவு ஆகியோா் தத்தமது மண்டலங்கள் மற்றும் பூங்காக்களில் உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, 15 நாட்களுக்குள் ‘புகைப்பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி‘ அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும்.