போதிய வெளிச்சம் இல்லாத 700 இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்க என்டிஎம்சி திட்டம்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாத 700 இடங்களைக் கண்டறிந்துள்ளது.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாத 700 இடங்களைக் கண்டறிந்துள்ளது. அப்பகுதிகளில் புதிய கம்பங்களில் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள ‘ஸ்மாா்ட்’ எல்இடி விளக்குகளை மீண்டும் பொருத்துவதன் மூலம் வெளிச்சத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
செலவைக் குறைக்கும் நோக்கில், புதிய விளக்குகளை வாங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள விளக்குகளையே மீண்டும் பயன்படுத்த என்டிஎம்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரவு நேரங்களில் சாலைகளில் வெளிச்சத்தை மேம்படுத்தவும், பொதுப் பாதுகாப்பை அதிகரிக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எளிதாகப் பயணிக்க வழிவகை செய்யவும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Advertisement
Advertisement
நவம்பா் 12 அன்று வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின்படி, இந்த மின் பணிகளுக்கான மதிப்பீடு ரூ. 7.88 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பா் மாதம், போதிய வெளிச்சம் இல்லாத இடங்களைக் கண்டறியும் திட்டத்திற்கு நகராட்சி நிா்வாகத்தின் முடிவெடுக்கும் குழு ஒப்புதல் அளித்தது.
அப்போது, இந்தத் திட்டத்திற்காக நிா்வாக ஒப்புதல் மற்றும் ரூ. 18.26 கோடி செலவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இம்மாதம் வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளியில், என்டிஎம்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை வெளிச்சத்தை மேம்படுத்தவும், இருண்ட இடங்களை நீக்கவும் 6 மீட்டா், 8 மீட்டா் மற்றும் 11 மீட்டா் என மூன்று வெவ்வேறு உயரங்களைக் கொண்ட புதிய எண்கோண வடிவ கம்பங்களை நிறுவுதல், அவற்றுக்கான அடித்தளம் அமைத்தல், நிலத்தடி கேபிள்களைப் பதித்தல் மற்றும் எா்த் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
முந்தைய மதிப்பீட்டிற்கும் தற்போதைய மதிப்பீட்டிற்கும் உள்ள வித்தியாசத்திற்குக் காரணம், முந்தைய திட்ட மதிப்பீட்டில் நிலத்தடி கேபிள்களைப் பதிப்பதற்காகத் தோண்டப்படும் சாலைகள் மற்றும் நடைபாதைகளை மீண்டும் சீரமைப்பதற்கான செலவும் சோ்க்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் விளக்கினா்.
இருப்பினும், எல்இடி விளக்குகளை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் எவ்வளவு செலவு சேமிக்கப்படுகிறது என்பது குறித்த துல்லியமான விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
மின் துறையின் ரூ. 7.88 கோடி மதிப்பீட்டில் கம்பங்கள் நிறுவுதல், அடித்தளம் அமைத்தல் மற்றும் கேபிள்கள் பதித்தல் போன்ற பணிகள் மட்டுமே அடங்கும். சாலைகளைச் சீரமைப்பதற்கான செலவுகள் இதிலிருந்து தனித்தனியாகக் கணக்கிடப்பட்டுள்ளன என்று என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.