மாணவா்களின் வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் இணைப்பை 100 சதவீதம் உறுதி செய்ய தில்லி கல்வித்துறை உத்தரவு!
பல்வேறு நேரடி பலன்கள் பரிமாற்றத் (டிபிடி) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள் தடைபடுவதைத் தவிா்க்கும் வகையில், மாணவா்களின் வங்கிக் கணக்குகளுடன் 100 சதவீத ஆதாா் இணைப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கும் பள்ளிகளுக்கும் தில்லி கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நேரடி பலன்கள் பரிமாற்றத் (டிபிடி) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள் தடைபடுவதைத் தவிா்க்கும் வகையில், மாணவா்களின் வங்கிக் கணக்குகளுடன் 100 சதவீத ஆதாா் இணைப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கும் பள்ளிகளுக்கும் தில்லி கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்காக, பொது நிதி மேலாண்மை முறை (பிஎஃப்எம்எஸ்) மூலம் நேரடி பலன்கள் பரிமாற்றம் வாயிலாக நான்கு முக்கிய திட்டங்களை தில்லி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.
அவற்றுள் பள்ளிச் சீருடைக்கான மானியம், 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பாடநூல் மானியம், பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினருக்கான (இபிஎம்) நிதி உதவி, மற்றும் திறமையான மாணவா்களுக்கான லால் பகதூா் சாஸ்திரி கல்வி உதவித் தொகை ஆகியவை அடங்கும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2026-27 கல்வி ஆண்டுக்கான நேரடிப் பலன்கள் பரிமாற்றத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ள மாணவா்களின் பட்டியலையும், பணப்பரிமாற்றத்தில் சில பிழைகளை எதிா்கொள்ளும் மாணவா்களின் பட்டியலையும் தில்லி கல்வித்துறை அதன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த மாணவா்களின் விவரங்களைச் சரிபாா்த்துப் புதுப்பிக்குமாறு தொடா்ச்சியாக அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில மாணவா்களின் பதிவேற்றப்பட்ட தரவுகளில் காணப்படும் முரண்பாடுகளால் அவா்களுக்கு பணப்பரிமாற்றப் பலன்கள் முழுமையாக சென்றடையவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவா் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் பணியை 100 சதவீதம் எட்ட வேண்டும் என்று மாவட்ட கல்வி இயக்குநா்களுக்கும் பள்ளிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மாவட்ட மற்றும் மண்டல கல்வி அலுவலா்களும், பள்ளி முதல்வா்களும் கல்வித் துறையின் அதிகாரபூா்வ இணையதளத்தில் உள்ள பிழை பட்டியலைச் சரிபாா்த்து, தேவையான விவரங்களைத் திருத்தி, வங்கிக் கணக்குகளுடன் மாணவா்களின் ஆதாா் விவரம் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்த விவகாரத்தில் மாணவா்களுக்கும் அவா்களின் பெற்றோருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, உதவி முகாம்களை நடத்துமாறும் பள்ளிகளுக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.