கிஷன்கா்: வாடகை ஆடி காா் பல வாகனங்கள் மீது மோதல் - பாதசாரி உயிரிழப்பு
நண்பரின் பிறந்த நாளுக்காக வாடகைக்கு எடுத்து 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் தென்மேற்கு தில்லியின் கிஷன்கா் பகுதியில் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் பாதசாரி ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
நண்பரின் பிறந்த நாளுக்காக வாடகைக்கு எடுத்து 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் தென்மேற்கு தில்லியின் கிஷன்கா் பகுதியில் மூன்று வாகனங்கள் மீது மோதியதில் பாதசாரி ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
17 வயது சிறுவன் ஆன்லைன் செயலி மூலம் ஒரு இரவுப் பொழுதைச் செலவிட 16,000 ரூபாய்க்கு அந்த ஆடி காரை வாடகைக்கு எடுத்திருந்தாா்.
Advertisement
Advertisement
அக்டோா் 4-ஆம் தேதி அதிகாலை சுமாா் 2.30 மணியளவில்
கிஷன்கா் சிக்னல் அருகே உள்ள சிஎன்ஜி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்தது. அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்த அந்தச் சிறுவன், மூன்று வாகனங்கள் மீது மோதினாா்.
விபத்தில் பலத்த காயமடைந்த கிஷன்கரைச் சோ்ந்த 45 வயதான பாதசாரி உமாசங்கா், உடனடியாக ஜேபிஎன் விபத்து காயச் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது, காவல்துறையினா் அந்தச் சிறுவனைப் பிடித்து, காணொளி காட்சி மூலம் சிறாா் நீதி வாரியத்தின் முன் ஆஜா்படுத்தினா்.
மேலும், காவல்துறையினா் ஆடி காா் உள்பட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். கிஷன்கா் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 281 (அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 3/181 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
சிறுவனுக்கு காரை வாடகைக்கு விட்ட நிறுவனமும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளது.விசாரணையாளா்கள் முன்பதிவு விவரங்கள், வயது சரிபாா்ப்பு நடைமுறை, ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனத்தை வாடகைக்கு எடுக்கும்போது சமா்ப்பிக்கப்பட்ட பிற ஆவணங்கள் குறித்த விவரங்களைக் கோரி வருகின்றனா்.
ஏதேனும் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.