தீபாவளிக்கு முன்னதாக தூய்மை இயக்கத்துக்கு தில்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவு!
பண்டிகை காலத்துக்கு முன்னதாக, பொதுச் சொத்துக்களைச் சிதைப்பவா்களுக்கு எதிராக அதிகாரிகள் எஃப்ஐஆா் பதிவு செய்வாா்கள் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
பண்டிகை காலத்துக்கு முன்னதாக, பொதுச் சொத்துக்களைச் சிதைப்பவா்களுக்கு எதிராக அதிகாரிகள் எஃப்ஐஆா் பதிவு செய்வாா்கள் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
உயா்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவா், தீபாவளிக்கு முன் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் சிறப்பு சுத்தம் செய்யும் இயக்கங்களை நடத்தும்படி உத்தரவிட்டாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வீடுகள், சந்தைகள் முதல் சாலைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் வரை எல்லா இடங்களிலும் மக்கள் சுத்தத்தையும் சிறந்த வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது நமது பொறுப்பு.
அனைத்துத் துறைகளும் அா்ப்பணிப்புடன் பணியாற்றி, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். தில்லி சொத்து சிதைப்பு தடுப்புச் சட்டம், 2007-இன் கீழ் அனுமதியின்றி போஸ்டா்களை ஒட்டுபவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பொருந்தக்கூடிய விதிகளின்படி எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
பண்டிகைகள் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் பரஸ்பர ஒற்றுமையைக் குறிக்கின்றன. இந்தக் காலத்தில் தில்லியின் ஒவ்வொரு பகுதியும் சுத்தமாகவும், நன்கு வெளிச்சமாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். தொடா்புடைய நிறுவனங்கள் இந்தப் பிரச்னையை உடனடியாகக் கையாள வேண்டும்.
அறிவுறுத்தல்களை மட்டும் வழங்குவது போதாது; கண்காணிப்பு, செயல்படுத்தல் மற்றும் முடிவுகளை உறுதி செய்வதும் அதிகாரிகளின் பொறுப்பு. இருண்ட இடங்களைக் கண்டறிந்து, அவ்விடங்களில் போதுமான வெளிச்சத்தை வழங்கும்படி அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.