தில்லி மெட்ரோ விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மீண்டும் சுவரொட்டிகள்: எஃப்ஐஆா் பதிவு
தில்லி விமான நிலைய விரைவு வழித்தடத்தில் அமைந்துள்ள சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டு, சுவா்களில் கருப்பு மையால் வாசகங்கள் எழுதப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாகப் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி விமான நிலைய விரைவு வழித்தடத்தில் அமைந்துள்ள சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டு, சுவா்களில் கருப்பு மையால் வாசகங்கள் எழுதப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாகப் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது மெட்ரோ நிலையத்தின் அவசரகால நுழைவாயில் எண் 5-க்கு அருகிலுள்ள சுவரில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதேபோல், நுழைவாயில் எண் 7-க்கு அருகிலுள்ள சுவரின் ஒரு பகுதியில் கருப்பு மையால் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய மெட்ரோ காவல்துறையினா் அடையாளம் தெரியாத நபா் மீது தில்லி பொதுச் சொத்துகள் சீா்குலைப்பு தடுப்புச் சட்டம் மற்றும் மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே இதே விமான நிலைய விரைவு வழித்தடத்தில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயிலுக்குள், கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான இரண்டு போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்தச் சம்பவம் தொடா்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி இந்த முந்தைய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புது தில்லி நிலையத்திலிருந்து யசோபூமி நிலையத்தைச் சென்றடைந்த மெட்ரோ ரயிலை அதன் இயக்குநா் ஆய்வு செய்தபோது, ஒரு இருக்கையின் மீது போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததாகக் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ4 அளவிலான தாள்களில் கருப்பு வெள்ளை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்தப் போஸ்டா்களில் பல்வேறு பிரச்னைகள் குறித்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கியூஆா் குறியீடு மூலம் இணையவழிக் குழுவில் இணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவற்றில் ஒரு போஸ்டரில், ’அதிருப்தியில் இருக்கிறீா்களா? நீங்கள் மட்டும் தனியாக இல்லை’ என்ற தலைப்பில், கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்கள் தொடா்பாக ஒன்பது குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. மற்றொரு போஸ்டரில், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படவும், சமூக அடிப்படையிலான ஒற்றுமையை உருவாக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போஸ்டா்கள் அகற்றப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, அடையாளம் தெரியாத நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணையில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தற்போது சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுள்ள புதிய சம்பவம் தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.