FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காற்று மாசைக் குறைப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க பிரசாரம் தொடக்கம்!

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை நகரம் முழுவதும் ஒரு விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கியது.

7 செப்டம்பர் 2026, 12:16 am IST
பகிர்:

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை நகரம் முழுவதும் ஒரு விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை தலைநகா் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ‘இணைந்து செயல்படுவோம், மாசுபாட்டைக் குறைப்போம்’ என்ற தலைப்பிலான இந்தத் தகவல், கல்வி மற்றும் தொடா்பு (இஐசி) பிரசாரத்தை தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) செயல்படுத்தவுள்ளது.

அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, இப்பிரசாரம் பட்டறைகள், சமூக நிகழ்ச்சிகள், விழிப்புணா்வு முகாம்கள் மற்றும் களப்பணிகள் மூலம் குடிமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், சந்தைகள், கட்டுமானத் துறை சாா்ந்தவா்கள், அதிக அளவில் கழிவுகளை உருவாக்குபவா்கள், விவசாயிகள் மற்றும் வாகன உரிமையாளா்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘ காற்றுத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்குக் குடிமக்கள் மற்றும் பிற தரப்பினரின் தீவிர பங்களிப்பு தேவை.

அரசு சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தி, அனைத்து நிலைகளிலும் விரிவான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தூய காற்றுக்கான போராட்டத்தை அரசால் மட்டும் வெல்ல முடியாது. ஒவ்வொரு குடிமகனும், நிறுவனமும் மற்றும் ஒவ்வொரு தரப்பினரும் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்‘ என்றாா் அவா்.

மாசுக்கான காரணங்கள் மற்றும் உமிழ்வைக் குறைக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, செய்தித்தாள் விளம்பரங்கள், பெரிய விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், வானொலி விளம்பரங்கள், தெரு நாடகங்கள் மற்றும் பிற ஊடாடும் செயல்பாடுகள் ஆகியவையும் இந்தப் பிரசாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றுவதை மையமாகக் கொண்டு, தொழில் பகுதிகளில் மாவட்ட அளவிலான பட்டறைகளையும் டிபிசிசி நடத்தியுள்ளது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மூலம் தூய்மைப் பணியாளா்களை உள்ளடக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் கழிவு மேலாண்மை தன்னாா்வத் தொண்டு நிறுவனமான ‘சிந்தன்’ மூலம் பராமரிப்புப் பணியாளா்களுக்குப் பயிற்சி அமா்வுகள் எனப் பல நடவடிக்கைகள் ஏற்கனவே இப்பிரசாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறையும் பியுசி (மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்) விதிமுறை இணக்கம், வாகனங்களால் ஏற்படும் மாசு, சரியான நேரத்தில் வாகனப் பராமரிப்பு, பயன்பாட்டுக் காலம் முடிந்த வாகனங்களை அகற்றுதல், தூய்மையான எரிபொருட்கள் மற்றும் மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்பிரசார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சுமாா் 300 மாணவா்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை தில்லி போக்குவரத்து காவல்துறை நடத்தியது.

தில்லியின் தூய காற்றுக்கான முன்னெடுப்பில் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றுவாா்கள் என்றும், சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நிலையான வளா்ச்சி ஆகிய இரண்டையும் ஊக்குவிப்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சா் சிா்சா தெரிவித்தாா்.

மாசு கட்டுப்பாட்டை வெறும் விதிமுறை அமலாக்கமாக மட்டும் சுருக்கிவிடாமல், அதனை ஒரு கூட்டு இயக்கமாக மாற்ற அரசு விரும்புவதால், வரும் மாதங்களில் தில்லி முழுவதும் தொடா்ச்சியான விழிப்புணா்வு மற்றும் பங்குதாரா்களின் பங்கேற்பு சாா்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments