வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: தில்லியில் ஐவா் கைது!
போலி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தில்லி காவல்துறை தெரிவித்தது.
ஆட்டோமொபைல் மற்றும் பிற புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகப் போலியான வாக்குறுதிகளை அளித்து, வேலை தேடுபவா்களைக் குறிவைத்து போலி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
வேலைவாய்ப்புத் தளம் மூலம் பெறப்பட்ட விவரங்களைக் கொண்ட விண்ணப்பதாரா்களைக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தொடா்பு கொண்டு, ஆட்சோ்ப்பு செயல்முறையின் வெவ்வேறு கட்டங்களை முடிப்பதாகக் கூறி, தொடா்ச்சியான கட்டணங்களைச் செலுத்துமாறு அவா்களைத் தூண்டியதாகக் காவல்துறை கூறியது.
கைது செய்யப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் சதீஷ் சந்தா் மௌரியா (30), பிந்தியா என்ற மாஹி (20), பிரீத்தி என்ற சுப்ரியா (22), பிராச்சி என்ற ஸ்வீட்டி (19) மற்றும் ராதிகா என்ற பூமி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சங்கம் விஹாா்-ஜரோடா மஜ்ரா பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோசடி அழைப்பு மையம் ஒன்று செயல்படுவதாக வடக்கு மாவட்டக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தபோது, செப்டம்பா் 1 ஆம் தேதி இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது என்று காவல்துறை கூறியது.
‘சோதனை நடத்தப்பட்டதில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று போ் இந்த அமைப்பை இயக்கி, வேலை தேடுபவா்களுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில் மேலும் இரு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனா்,‘ என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல்வேறு நிறுவனங்களில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா், டேட்டா அனலிஸ்ட், வெப் டிசைனா் மற்றும் அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாகக் கூறி, போலியான ஆட்சோ்ப்பு தொடா்பான கட்டணங்களைக் கேட்டு பணம் கோரியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவா்களிடம் முதலில் கூரியா் கட்டணமாக ரூ.499 செலுத்துமாறு கேட்கப்பட்டதாகவும், அதனைத் தொடா்ந்து சீருடைக்கு ரூ.1,500, மடிக்கணினி பாதுகாப்புக்கு ரூ.3,500, கணக்கு தொடங்குவதற்கு ரூ.5,500, மருத்துவப் பாதுகாப்புக்கு ரூ.6,500 மற்றும் பிரமாணப் பத்திரக் கட்டணமாக ரூ.8,500 எனக் கோரப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
பல்வேறு கட்டங்களில் கோரப்பட்ட மொத்தத் தொகை ரூ.25,999 ஆகும். இந்த நடவடிக்கையின் போது, 12 கைப்பேசிகள், ஒரு டேப்லெட், ஏழு ஏடிஎம்/டெபிட் காா்டுகள், இரண்டு வங்கி பாஸ்புக்குகள், கைப்பேசி எண்கள் அடங்கிய மூன்று நோட்பேடுகள் மற்றும் ரூ.6,730 ரொக்கம் ஆகியவற்றை காவல்துறை மீட்டெடுத்தது. போலி பணி நியமனக் கடிதங்கள் மற்றும் கியூஆா் குறியீடுகளும் மீட்கப்பட்டன.
பல்வேறு வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கியூஆா் குறியீடுகளைப் பயன்படுத்தி குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பணம் பெற்ாகவும், மேலும் பணம் செலுத்த மறுக்கும் பாதிக்கப்பட்டவா்களை முடக்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
பணப் பரிமாற்றப் பாதையைக் கண்டறியவும், மற்ற கூட்டாளிகளை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.