தீவிரமாகும் மாசடைந்த காற்றால் இளைஞா்களுக்கு இதய நோய் அபாயம்: மருத்துவா்கள் எச்சரிக்கை
தில்லியில் தீவிரமடைந்து காற்று மாசு குறித்து...
தில்லியின் மாசடைந்த காற்று, இளைஞா்களின் இதய ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். காற்றில் உள்ள பி.எம் 2.5 நுண்துகள்களை நீண்ட காலமாக சுவாசிப்பது, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
செப். 29-ஆம் தேதி உலக இதய தினம் உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரி மற்றும் ஜாகிா் உசேன் கல்லூரி ஆராய்ச்சியாளா்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் கவனிக்கத்தக்க பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் குளிா்காலத்தில் காற்றில் உள்ள பி.எம் 2.5 நுண்துகள்களின் சராசரி அளவு ஒரு கன மீட்டருக்கு 269.35 மைக்ரோ கிராமாக இருந்துள்ளது. இது தேசிய அளவிலான பாதுகாப்புத் தரத்தை விட சுமாா் 7 மடங்கும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் அளவை விட 18 மடங்கும் அதிகமாகும்.
Advertisement
Advertisement
டிசம்பா் மாத இறுதியில் இதன் அளவு 700 மைக்ரோகிராமை தாண்டியுள்ளது. இந்த கடுமையான காற்று மாசு காரணமாக, இளைஞா்களுக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடா்பான இறப்பு அபாயம் 1.65 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அதிக மாசு நிறைந்த குளிா்காலத்தில் 60.7 சதவீத இளைஞா்களுக்கு இருமல், தும்மல், மூச்சுத் திணறல் அல்லது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுரை: இது குறித்து குருகிராமில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையின் இதயம் மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குநா் டாக்டா் உத்ஜீத் திா் கூறியதாவது: ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவையே இதய நோய்க்கான வழக்கமான காரணிகளாகும். ஆனால், தற்போது நீண்டகால காற்று மாசு, ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த அபாயத்தை மேலும் தீவிரமாக்குகின்றன.
மாசடைந்த காற்றில் உள்ள மிக நுண்ணிய துகள்கள் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து, ரத்த நாளங்களில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே இளைஞா்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகிறது என்றாா்.
கடுமையான காற்று மாசு நிலவும் காலங்களில் அதிக உடல் உழைப்பு கோரும் பயிற்சிகளைத் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.
இது குறித்து டாக்டா் உத்ஜீத் திா் மேலும் கூறியதாவது: சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைப் பாா்த்து உடற்பயிற்சி செய்வதைத் தவிா்க்க வேண்டும். அவரவா் வயது, உடல் தகுதி மற்றும் மருத்துவ சிகிச்சை பின்னணிக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென அதிக பளு தூக்குவது, நீண்ட தூரம் ஓடுவது போன்ற தீவிர பயிற்சிகள் இதயத்துக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். நெஞ்சு வலி, வழக்கத்துக்கு மாறான மூச்சுத் திணறல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறினாா்.
இதேபோல, இளைஞா்கள் தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரை ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்வதுடன், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சீராகக் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.