கலைமகள் தீபாவளி மலர்-2026
கதை, கவிதை, ஆன்மிகம், பயணம், விஞ்ஞானம் என பல்சுவை கலந்த இனிய விருந்து படைக்கிறது கலைமகள் தீபாவளி மலர்!
கலைமகள் தீபாவளி மலர்-2026; எஸ். சங்கரசுப்பிரமணியன்; பக். 216; ரூ. 200; கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 004. 044-2496 1699.
'யாரை முன்னுதாரணமாகக் கொள்லாம்?'-காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் அருளுரை அற்புதம்.
Advertisement
Advertisement
தியாகம், சத்தியம், தைரியம், பொறுமை, ஒழுக்கம், பரிவு போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் ஒருங்கே உடையவர் யார்? நமக்கு நன்மை தருவதுடன் பிறருக்கு துன்பம் தராதது உண்மையான நல்லது; இதுவே தர்மம். அத்தகையவரைப் போற்றி, முன்னுதாரணமாக கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். இதனை ராமாயண இதிகாசம் கொண்டு விளக்குகிறார் சங்கராசார்ய சுவாமிகள்.
ஊழ்வினையின் தாக்கத்தை விளக்குவதுடன், அகந்தையை அழித்து அறத்தின் வழியில் மனிதன் வாழ வேண்டும் என்ற ஒப்பற்ற விதியைக் கூறும் காப்பியம் சிலப்பதிகாரம் என்று தனது கட்டுரையில் நிறுவுகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
'குவான்டம்' விஞ்ஞானம் தேடிய பிரபஞ்ச தத்துவத்தை பாரதத்தின் வேதங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டடைந்துவிட்டதை விளக்கிக் கூறுகிறது ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியின் 'வேதத்தை நாடிய விஞ்ஞானிகள்' கட்டுரை.
நமது உடல் தொடங்கி இவ்வுலகம், சந்திரன், சூரியன் கொண்ட பிரபஞ்சம் முழுவதும் உள்ளிருந்து இயக்குவது கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் என்று கூறியது குவான்டம் விஞ்ஞானம். நாம் பார்க்கும் பிரபஞ்சம் அணுவால் உருவானது; அணுவே பிரபஞ்சத்தின் ஆதாரம்; ஆனால், வெறும் கண்ணால் காண முடியாத அணு எப்படித் தோன்றியது? அணுவுக்கு முன்பு என்ன இருந்தது? மேற்கத்திய விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கான விடை பாரதத்தின் வேதத்தில் அவர்களுக்குக் கிடைத்தது என்கிறது இக்கட்டுரை.
காசி யாத்திரை குறித்த பயணக் கட்டுரை பயனுள்ள பல புதிய தகவல்களைக் கொண்டுள்ளது. மேலும், திருவாரூர், கேரளத்தில் கொடுங்கல்லூர் ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகச் சுற்றுலா பகுதியை அலங்கரிக்கின்றன.
மலரில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறப்புச் சிறுகதைகள் மலர் என்றே கூறும்படியாக, ஒன்றையொன்று விஞ்சும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படைப்புகள்.
கதை, கவிதை, ஆன்மிகம், பயணம், விஞ்ஞானம் என பல்சுவை கலந்த இனிய விருந்து படைக்கிறது கலைமகள் தீபாவளி மலர்!