லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்-2026
30-ஆவது ஆண்டாக வெளியாகியுள்ள இந்த தீபாவளி மலர், படித்து ரசிக்க மட்டுமல்ல பாதுகாத்து வைக்க வேண்டியதுமாகும்.
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்-2026; கிரிஜா ராகவன்; பக்.192; ரூ.250; சென்னை-600 083. 98408 16281.
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான இந்த மலரில், அனைத்து வகை படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஆஞ்சனேயர் அட்டைப்படத்துடன் வெளியானதால் அனுமனின் சிறப்புகளை விளக்கும் ஆஞ்சனேயரின் அருமை, துளசிதாசர் அனுமனை எப்படி பார்த்தார்; ஆழ்வார்பேட்டை, நங்கநல்லூர், சேதுக்கரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஞ்சனேய சுவாமியின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
குறிப்பாக, நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயில் கட்ட சுவாமியே ஒரு பக்தரின் கனவில் வந்து சொல்லி கோயில் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோயில் கட்டுவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக முஸ்லிம் அன்பர் ஒருவர் வந்து கோயில் கட்ட இடம் கொடுத்தது; அதனால், கோயில் குழுவினர் வியப்பில் ஆழ்ந்தது; 32 அடி உயர ஆஞ்சனேயர் சிலையை வடிவமைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், அதில் சுவாமிகளின் வழிகாட்டுதல்கள் என தகவல்கள் படிக்க படிக்க வியப்பைத் தருகின்றன.
வழக்கம்போல நிகழாண்டு மலரிலும் 24 சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள், பாதுகாத்து வைக்க வேண்டிய வண்ணப் புகைப்படங்கள் என அனைத்தும் மணம்மிக்க மலராக உள்ளது. திருப்பூர் கிருஷ்ணனின் 'காலங்கள் மாறும்' சிறுகதை ருசிகரம். மொழிபெயர்ப்பு சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
'போட்டோ கமென்ட்' என்ற பெயரில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும், அதிலுள்ள வாசகங்களும் சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக, எம்ஜிஆர் படம் 'போட்டோ கமென்ட்டில்' இடம்பெற்றுள்ள வாசகம் இன்றைய அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக உள்ளது. ரசிக்கவும் வைக்கிறது.
30-ஆவது ஆண்டாக வெளியாகியுள்ள இந்த தீபாவளி மலர், படித்து ரசிக்க மட்டுமல்ல பாதுகாத்து வைக்க வேண்டியதுமாகும்.