FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விகடன் தீபாவளி மலர்-2026

தபால் மனிதர்களின் அர்ப்பணிப்பு ஓட்டம் குறித்த பக்கங்கள் மலைப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் நூதன வரலாற்று சம்பவங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

17 வினாடிகள் முன்பு
பகிர்:

விகடன் தீபாவளி மலர்-2026; கா. பாலமுருகன்; பக். 400; ரூ.200; ஆனந்த விகடன் பப்ளிஷர்ஸ் (பி) லிட்., சென்னை-600 002. 044-6607 6407.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானத்தின் அருளுரையுடன் தெய்வீகமாகத் தொடங்குகிறது மலர். கோயில்களில் ஆறு கால பூஜைக்கும் ஆறு வித ராகங்களை இசைக்கும் நாகஸ்வரம் குறித்த பிரம்மிக்க வைக்கும் விளக்கங்களால் அதன் தெய்வீகத்தன்மை தெளிவாக விளங்குகிறது.

Advertisement

Advertisement

மறைமலை அடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டுக்காகவும், ஃபிடல் காஸ்ட்ரோ, மஹாஸ்வேதா தேவி, கவியரசர் கண்ணதாசன் மற்றும் வி.கே. ராமசாமி ஆகியோரின் பிறந்த நூற்றாண்டுகளுக்காகவும், ரஜினிகாந்த்தின் திரையுலக பொன்விழாவுக்காவும் கொடுத்திருக்கும் இடங்கள் 'கெüரவ பக்கங்கள்'.

தங்களது நடிப்பாற்றலால் கதாபாத்திரமாகவே மாறி திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் மூணார் ரமேஷ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் இன்னும் வெளிச்சத்துக்கு வரவேண்டியவர்கள் என்பதை தந்திருக்கும் தகவல்கள் அங்கீகரிக்கின்றன.

திருவிதாங்கூர் மன்னர், 'அதென்ன மாணிக்க மாலையா?' என்று கேட்க அந்தப் பெயரே நிலைத்துவிட்ட தோவாளை மாலையின் பயணம் வியப்பானது.

கேரளத்தின் சாம்பிராணிக்கோடியும், புதுச்சேரியின் தொட்டுணரும் வனவிலங்கு காட்சியகமும், ராஜஸ்தானின் குல்தாராவும், மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள கண்ணாடி ஆலயமும் பயணித்து ரசிக்க வேண்டிய இடங்கள்.

தபால் மனிதர்களின் அர்ப்பணிப்பு ஓட்டம் குறித்த பக்கங்கள் மலைப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் நூதன வரலாற்று சம்பவங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. அம்பாசடரின் கம்பீர வரலாறு, சென்னையின் மணிக்கூண்டுகள் போன்ற வரலாற்றுப் பதிவுகள் பாதுகாக்கக் கூடியவை.

புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் புனித ஜார்ஜ் கோட்டையின் அறியப்படாத பகுதிகளையெல்லாம் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுபோல வந்துள்ள கட்டுரை விகடனின் தனித்துவம்.

இலக்கிய ஆளுமைகள், சிறுகதைகள், கவிதைகள், ஆன்மிகம், இசை, சினிமா, சுற்றுலா, வரலாறு, டி.வி., திருவிழா, உணவு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய தீபாவளி மலராக வந்திருக்கும் விகடனுக்கு, எப்போதும் சினிமாவின் மேல் அதீதக் காதல் என்பது இந்த மலரில் மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

தவிர்க்க முடியாத பிரிவினராக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் 'ஜென் ஸீ' சாதனையாளர்களை ஆங்காங்கே பதிவிட்டிருப்பதை, விகடனின் பாணியில் சொல்லப்போனால், சோன் பப்டியில் தெரியும் பாதாம் பருப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.