ஓம் சக்தி தீபாவளி மலர்-2026
'வாசிக்க வாசிக்க வந்துகொண்டே இருக்கும் கூடுதல் பக்கங்களுடன்' தீபாவளி மலரை ரூ.175-இல் 406 பக்கங்களில் நமக்குத் தந்துள்ளனர். மலரில் காணக் கிடைக்காதது ஜோக்ஸ் மட்டும்தான்.
ஓம் சக்தி தீபாவளி மலர்-2026; ம. மாணிக்கம்; பக்.406; ரூ.175; ஓம் சக்தி பப்ளிகேஷன்ஸ், கோவை - 641 018. 0422-4322471.
ஆன்மிகம், தத்துவம், சிறுகதைகள், உண்மைக் கதை, நம்பிக்கை கட்டுரைகள், மனஇறுக்கம் தளர்த்தும் ஆலோசனைகள், மருத்துவம், சுற்றுலா, கோயில் உலா, பிரார்த்தனை என விதவிதமாக, பல வண்ணங்களில் வாண வேடிக்கைப் பார்த்த பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது ஓம்சக்தி தீபாவளி மலர் 2026.
Advertisement
Advertisement
நதிகளின் புனிதம் மற்றும் அது தொடர்பான புராண கதைகளையும் விளக்கி, நதியை வணங்க வேண்டியதன் அவசியத்தை கேப்டன் ஆர். சிவசைலம் கூறும் அதே வேளையில், ஆலயத்தை நாம் எந்த அளவுக்கு பாழ்படுத்தி வருகிறோம் என்பதை வெ. இன்சுவையின் 'ஆலயப் பெருமையும் இன்றைய நிதர்சனமும் கட்டுரை' வெட்டவெளிச்சமாக்குகிறது.
ஜெ. பாஸ்கரனின் 'உணவே மருந்து மருந்தே உணவு' தீபாவளி நேரத்தில் படிக்கப்பட வேண்டிய கட்டுரை.
ஆன்மிகத்துடன் கொஞ்சம் மனம் லேசாக்கும் கதைகள் நிறைய உள்ளன. இவற்றில், குடும்பத்துக்காக உழைத்து ஓடாகி, தனித்து நிற்கும் பெண்ணை சித்திரிக்கும் கார்த்தியின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்'; கிடைத்ததை சுருட்டும் உலகில், நினைத்துப்பார்க்க முடியாத நேர்மையுடன் வாழும் தம்பதியைக் காட்டும் திருப்பூர் கிருஷ்ணனின் 'உண்டாலம்ம இவ்வுலகம்;', கலைக்கப்பட்டவை கரு அல்ல, இரண்டு உயிர்கள் என்ற எண்ணம் மறையாமல் வருந்தி வருந்தி, கணவனை உச்சபட்சமாக வெறுக்கும் பெண்ணின் ஆழ்மன ஆவேசத்தை சொல்லும் வாரணாசி நாகலட்சுமியின் தெலுங்கு மொழிச் சிறுகதை 'நாளைய கேள்வி' ஆகியவை நல்ல கதைகள்.
விபத்தில் கண்பார்வையை இழந்து, மூன்று ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் தெய்வ நம்பிக்கை, வேண்டுதல்களில் பார்வையை திரும்பப்பெற்ற என்.சி. மோகன்தாஸின் வாழ்க்கை அனுபவமும், எல்லோரா சிற்பங்கள் மற்றும் தோரணமலை முருகன் கோயில், ஆன்மிக சுற்றுலா, தமிழக மரச்சிற்பங்களின் கலைச்சிறப்பு மற்றும் தொன்மை குறித்த கட்டுரைகளும் நன்று.
பொறிவாயில் ஐந்தவித்தான் கட்டுரையும், 'நவகிரகங்களும் மகாபாரத கதாபாத்திரங்களும்' கட்டுரையும் புதிய கோணத்தில் அமைந்தவை. 387-ஆம் பக்கத்தில் மிக அழகான அம்மன் படம் உள்ளது. கரும்பைக் கொண்டு காமாட்சி என்று ஊகிக்க முடிகிறது. பெயரை அச்சிட்டிருக்கலாம்.
மற்றபடி, ஓம்சக்தி ஆசிரியர் ம. மாணிக்கம் முகப்புரையில் சொல்வது போல, 'வாசிக்க வாசிக்க வந்துகொண்டே இருக்கும் கூடுதல் பக்கங்களுடன்' தீபாவளி மலரை ரூ.175-இல் 406 பக்கங்களில் நமக்குத் தந்துள்ளனர். மலரில் காணக் கிடைக்காதது ஜோக்ஸ் மட்டும்தான்.