FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி...

சுவாமிமலை முருகன் - video crop
பகிர்:

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமி மலை அமைந்துள்ளது. பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.

Advertisement

Advertisement

தந்தை சிவபெருமானுக்கு "ஓம்" எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே, இத்தலத்தில் முருகப்பெருமான் சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் - அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது.

இத்தகைய சிறப்புப்பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளி - தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான திருக்கார்த்திகை தினமான வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு மேல் திருத்தேரோட்டமும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று தீபக் காட்சியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.