முதல் உலக சாம்பியன் இந்தியா!
அதிரடி, வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துக்குப் பெயர் பெற்ற 6-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
அதிரடி, வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துக்குப் பெயர் பெற்ற 6-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8-ஆம் தேதி நாகபுரியில் தொடங்குகிறது. கொல்கத்தா, மும்பை, தில்லி, நாகபுரி, பெங்களூரு, தர்மசாலா, மொஹாலி ஆகிய 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
தரவரிசை அடிப்படையில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் 2-ஆவது சுற்றான சூப்பர் 10 சுற்றுக்கு நேரடித் தகுதி பெற்றுவிட்டன.
எஞ்சிய 8 அணிகள் குரூப் சுற்றில் விளையாடும். அதில் இருந்து இரு அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 10 சுற்று வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ஆம் தேதியன்று புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு முதல் உலகக் கோப்பையை பற்றிய ஒரு தொகுப்பு:
முதல் சதம்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டி, சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வான்டரெர்ஸில் நடந்த முதல் ஆட்டம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் மோதிய அந்த ஆட்டத்தில் மொத்தம் 413 ரன்கள் குவிக்கப்பட்டன. டி20 போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டம் என்ற பெருமை அதற்கு கிடைத்தது.
கிறிஸ் கெயில் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாச, மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. டி20 போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமை கெயிலுக்கு கிடைத்தது.
பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, கிப்ஸின் (55 பந்துகளில் 90 ரன்கள்) அதிரடியால் 14 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டி20 போட்டியில் அதிகபட்ச இலக்கை விரட்டிப்பிடித்த அணி என்ற பெருமை தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்தது. இதன்பிறகு ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட நிலையில், அதிரடிக்குப் பெயர் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசத்திடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.
மிரட்டிய மிஸ்பா: செப்டம்பர் 24-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களும், ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதுவரை நிதானம் காட்டிய மிஸ்பா உல் ஹக், ஹர்பஜன் வீசிய 17-ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி, இந்தியாவை மிரட்டினார்.
மிஸ்பாவின் அதிரடியால் உத்வேகம் பெற்ற எதிர்முனை பேட்ஸ்மேனான சோஹைல் தன்வீர் ஸ்ரீசாந்த் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி பாகிஸ்தானுக்கு நம்பிக்கைக் கொடுத்தார். பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட, ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா சாம்பியன்: ஆனால் 19-ஆவது ஓவரை வீசிய ஆர்.பி.சிங் 7 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். மிக இக்கட்டான சூழலில் (13 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில்) கடைசி ஓவரை வீச வந்தார் பெரிய அனுபவம் இல்லாதவரான ஜோகிந்தர் சர்மா.
முதல் பந்தை வைடாக வீசிய ஜோகிந்தர், 2-ஆவது பந்தை புல்டாசாக வீச, மிட் விக்கெட்டில் சிக்ஸரை விளாசினார் மிஸ்பா உல் ஹக். அடுத்த 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, இந்தியா தோற்றுவிட்டதாகவே ரசிகர்கள் நினைத்தார்கள்.
3-ஆவது பந்தில் ஸ்டெம்பை விட்டு விலகிய மிஸ்பா, ஸ்வீப் ஷாட் ஆடினார். பேட்டில் பட்ட வேகத்தில் பந்து பறக்க, என்ன ஆகுமோ என எல்லோரும் பதறினர். ஆனால் ஷாட் பைன் லெக் திசையில் நின்ற ஸ்ரீசாந்த் அற்புதமாக கேட்ச் செய்ய, வெற்றிக் களிப்பில் துள்ளிக்குதித்தனர் இந்திய வீரர்கள்.
கடைசி வரை போராடிய மிஸ்பா தோற்ற சோகத்தில் மைதானத்தில் சரிந்தார். 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. கேப்டனாக களமிறங்கிய முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே கோப்பையை வென்று சாதித்தார் தோனி. இதன்பிறகு தோனிக்கு ஏறுமுகம்தான்.
அப்ரிதி தொடர் நாயகன்: 91 ரன்களைக் குவித்ததோடு, 12 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
பெளல் அவுட்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க, பெளல் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த முறைப்படி பந்துவீசி ஸ்டெம்பை தகர்க்க வேண்டும். அதில் இந்தியத் தரப்பில் சேவாக், ஹர்பஜன் சிங், உத்தப்பா ஆகியோர் துல்லியமாக ஸ்டெம்பை தகர்க்க, இந்தியா வெற்றி கண்டது.
சிக்ஸர் சிங்
சூப்பர் 8 சுற்றில் இந்தியா-இங்கிலாந்து மோதிய ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தைத் தொட்டது. இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட அந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆன்ட்ரூ பிளின்டாப், யுவராஜ் சிங்கை வெறுப்பேற்றினார். அதற்கு பதிலடியாக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 பந்துகளிலும் சிக்ஸர்களை விளாசி, இங்கிலாந்து அணியை அதிரவைத்தார் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் அரை சதமடித்ததன் மூலம் அதிவேக அரை சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் யுவராஜ் சிங். இன்றளவும் அந்த சாதனை அவரிடமே உள்ளது. அவர் 6 சிக்ஸர்களை விளாசிய விடியோ இணையதளத்தில் இன்றளவிலும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.
துரத்திய துரதிருஷ்டம்
சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. உலகக் கோப்பைக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் ராசியில்லை என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டது. மொத்தத்தில் துரதிருஷ்டம் இந்த முறையும் தென் ஆப்பிரிக்காவை விட்டுவைக்கவில்லை.
திருப்புமுனை ஏற்படுத்திய ஸ்ரீசாந்த்
அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங் 30 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்களை விளாசினார்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஹேடனும், ஆன்ட்ரூ சைமண்ட்ஸும் வெளுத்து வாங்க, ஆஸ்திரேலியா வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
இதையடுத்து 15-ஆவது ஓவரை வீச ஸ்ரீசாந்தை அழைத்தார் தோனி. அதற்கு உடனடியாக பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் 4-ஆவது பந்தில் ஸ்ரீசாந்தின் துல்லியமான யார்க்கருக்கு ஸ்டெம்பை பறிகொடுத்தார் ஹேடன் (47 பந்துகளில் 62 ரன்கள்). இந்த ஆட்டத்தில் முன்னதாக கில்கிறிஸ்டையும் கிளீன் போல்டாக்கியிருந்தார் ஸ்ரீசாந்த்.
17-ஆவது ஓவரை வீசிய இர்ஃபான் பதான், சைமண்ட்ûஸ (26 பந்துகளில் 43 ரன்கள்) போல்டாக்க, ஆட்டம் இந்தியாவின் வசம் திரும்ப ஆரம்பித்தது. கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 18-ஆவது ஓவரை வீசிய ஹர்பஜன் சிங், கிளார்க்கை வீழ்த்தியதோடு 3 ரன்களை மட்டுமே கொடுக்க, இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.