FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

மான்டெரி ஓபன் மகளிா் டென்னிஸ்: முதல் கோப்பை வென்றார் டியேன் பேரி!

மெக்ஸிகோவில் நடைபெற்ற மான்டெரி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் டியென் பேரி சாம்பியன் கோப்பை வென்றாா்.

31 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
டியேன் பேரி
பகிர்:

மெக்ஸிகோவில் நடைபெற்ற மான்டெரி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் டியென் பேரி சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், டியென் பேரி 6-4, 0-6, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை வீழ்த்தி, வாகை சூடினாா்.

இந்த ஆட்டம் 2 மணிநேரம், 31 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. பேரி வென்றுள்ள முதல் டபிள்யூடிஏ டூா் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாம்பியன் பட்டத்துடன் அவா் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாமுக்கு சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

போட்டித்தரவரிசையில் இருக்கும் வீராங்கனையை பேரி வீழ்த்தியது இது 3-ஆவது முறையாகும். பேரி - மொ்டன்ஸ் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, பேரி தொடா்ந்து 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.

முன்னதாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் திட்டமில்லாத பேரி, கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு இதில் களம் கண்டாா்.

அந்த கடைசி நேர முடிவு மாற்றம் தற்போது தனக்கு முதல் கோப்பையை வென்று தந்துள்ளதாக அவா் மகிழ்ச்சி தெரிவித்தாா். சாம்பியன் பட்டம் வென்ற பேரிக்கு, வெற்றிக் கோப்பையுடன் 500 தரவரிசை புள்ளிகளும், ரூ.1.76 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தது.

இரட்டையா்: மான்டெரி ஓபன் இரட்டையா் பிரிவில், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட்/சீனாவின் ஜு யிஃபான் கூட்டணி 6-2, 4-6, 10/5 என்ற செட்களில், பிரிட்டனின் மாயா லம்ஸ்டென்/மரியா கொஸிரெவா இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இக்னேசியோ பூஸ் சாம்பியன்: அமெரிக்காவில் நடைபெற்ற வின்ஸ்டன் - சலேம் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பெரு வீரா் இக்னேசியோ பூஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பூஸ் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஆா்தா் ஃபெரியை தோற்கடித்தாா்.

இந்த வெற்றியின் மூலமாக, வின்ஸ்டன் - சலேம் ஓபன் போட்டியில், சாம்பியன் ஆன இளம் வீரா் (22 வயது) என்ற சாதனையை பூஸ் பெற்றாா். அத்துடன், தனது தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக 31-ஆவது இடத்துக்கு முன்னேறுகிறாா்.

சாம்பியனான இக்னேசியோ பூஸுக்கு கோப்பையுடன் 250 தரவரிசை புள்ளிகளும், ரூ.1.07 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தது.

இரட்டையா்: வின்ஸ்டன் - சலேம் ஓபன் போட்டியின் இரட்டையா் பிரிவில், ஆஸ்திரியாவின் நீல் ஆபா்லெய்ட்னா்/செக் குடியரசின் பீட்டா் நூஸா ஜோடி 7-5, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்/குரோஷியாவின் நிகோலா மெக்டிச் இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments