முகப்பு
கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அரைசதம் விளாசி வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Updated On : 13 ஜூன், 2025 at 2:45 PM
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் மிட்செல் ஸ்டார்க் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் லார்ட்ஸ் திடலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி வருகின்றன.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், 9-வது வீரராக களம் கண்ட வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்

சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்டார்க் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம், ஐசிசியின் நாக் அவுட் போட்டிகளில் 9-வது வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க்கின் 11-வது அரைசதம் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 11 அரைசதங்களில் 8 அரைசதங்கள் அவர் 9-வது அல்லது அதற்கு அடுத்த இடத்தில் களமிறங்கி எடுத்ததாகும். டெஸ்ட் போட்டிகளில் 9-வது இடத்தில் களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.

ஒரு அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9-வது அல்லது அதற்கு அடுத்த வீரராக களமிறங்கி இரண்டு வீரர்கள் மட்டுமே 5 முறை அரைசதம் எடுத்துள்ளனர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரையுமே இந்த பெருமை சேரும்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments