படம் | ஐசிசி
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை உருவான வரலாறு! 2007 முதல் 2024 வரை!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உருவான வரலாறு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. 12 அணிகள் பங்கேற்று விளையாடிய அறிமுக டி20 உலகக் கோப்பைத் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அறிமுக உலகக் கோப்பைத் தொடர் 12 அணிகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசனில் 20 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த 10 சீசன்களில் இதுவரை 6 வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகளும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு முறை சாம்பியம் பட்டம் வென்றுள்ளன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடர் உருவான வரலாறை பின்வருமாறு காணலாம்.

டி20 கிரிக்கெட்டின் அறிமுகம்

21-ஆம் நூற்றாண்டில் டி20 கிரிக்கெட் மிகப் பெரிய வளர்ச்சியடைந்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பிப் பார்க்கக் கூடிய போட்டியாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையாகாது. ஆனால், முதன் முதலாக டி20 வடிவிலான கிரிக்கெட்டினை அறிமுகப்படுத்த இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் முயற்சி செய்தபோது, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கிரிக்கெட் விளையாட்டுக்கு புதிய ரசிகர்களை கவர்வதற்காக உருவாக்கப்பட்டதாகவே டி20 வடிவிலான போட்டிகள் பார்க்கப்பட்டது. கிரிக்கெட்டினை அதிக அளவிலான மக்களுக்கு எடுத்துச் செல்ல இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன் முதலில் கடந்த 2003 ஆம் ஆண்டு டி20 வடிவிலான போட்டி அறிமுகப்பட்டுத்தப்பட்டது. அதன் பின், உலகம் முழுவதும் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டே டி20 வடிவிலான போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் அறிமுகமே டி20 வடிவிலான போட்டிகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிமுக உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்தை கிறிஸ் கெயில் பவுண்டரிக்கு விளாச டி20 கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் தொடங்கியது. அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் சதம் விளாசி அசத்தினார். அவர் 57 பந்துகளில் 117 ரன்கள் (7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்தார். முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் சதத்தை கிறிஸ் கெயில் பதிவு செய்தார்.

அதன் பின், அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் பௌல் அவுட் முறையில் வெற்றியாளரை தீர்மானித்தது முதல் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் யுவராஜ் சிங் விளாசியது வரை பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறின. அதேபோல, பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக்கின் துரதிருஷ்டவசமான ஸ்கூப் ஷாட்டும் அறிமுக டி20 உலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்றது.

அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியம் பட்டம் வென்றதிலிருந்து இந்த 20 ஆண்டுகளில் இதுவரை 9 டி20 உலகக் கோப்பைத் தொடர் சீசன்கள் நடைபெற்றுள்ளன. இந்த 20 ஆண்டுகளில் டி20 வடிவிலான போட்டி பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. தற்போது, டி20 உலகக் கோப்பைத் தொடரில் 10-வது சீசனும் தொடங்கவுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் முக்கிய தருணங்கள்

அறிமுக உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் ஷாகித் அஃப்ரிடி பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது சீசனில் சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அதிர்ச்சியளித்தது. கிரிக்கெட் வரலாற்றில் பெரிய அணி ஒன்று சிறிய அணியிடம் அதிர்ச்சிகரமான தோல்வியடையும் பட்டியலில் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்துக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சித் தோல்வியும் சேர்க்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற அடுத்த சீசனில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்ட கெவின் பீட்டர்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

அதன் பின், 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சீசனில் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் மார்லன் சாமுவேல்ஸ் 78 ரன்கள் எடுத்து அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3.4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இலங்கையில் நடைபெற்ற 4-வது சீசனில் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் கோப்பையை பறிகொடுத்த இலங்கை அணி, 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற 5-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இலங்கை அணியில் குமார் சங்ககாரா மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே சிறப்பாக செயல்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அடுத்த சீசனில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது மேற்கிந்தியத் தீவுகள். கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கார்லஸ் பிராத்வெயிட், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் விளாசி மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்தப் போட்டியின்போது, வர்ணணையாளர் இயான் பிஷப் “ரிமம்பர் த நேம் கார்லஸ் பிராத்வெயிட்” எனப் பேசியது மிகவும் பிரபலமானது.

அதன் பின், 5 ஆண்டுகளாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் மீண்டும் தொடங்கியது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதன் பின், அடுத்த ஆண்டு நடைபெற்ற சீசனில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம் கரண் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சாம் காரண், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதினையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அறிமுக சீசனில் 12 அணிகளுடன் தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பைத் தொடர், பின்னர் 16 அணிகளாக மாறியது. கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அணிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் உகாண்டா அணிகள் உலகக் கோப்பைத் தொடரில் முதன் முதலாக அறிமுகமாகின.

மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து டி20 தொடரை நடத்திய அமெரிக்கா, சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணியும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது.

இந்த சீசனில் மிகப் பெரிய அளவில் சோபிக்காத விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 76 ரன்கள் குவித்தார். அதன் பின், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் மாயாஜாலம் செய்தார். இறுதியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது அவர்களுக்கான பிரியாவிடையாக அமைந்தது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் புதிய அணியாக இத்தாலி சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் தொடங்குகிறது.

Regarding the history of the ICC T20 World Cup cricket tournament...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவான பொருளாதாரம்: ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!

ஒரேயொரு அறிவிப்பு! பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ஏன்?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT