முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 36.4 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நியூமேன் நியாம்ஹுரி 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரிச்சர்ட் நிகராவா 27 ரன்களும், இன்னோசண்ட் கையா 26 ரன்களும் எடுத்தனர். பென் கரண் 18 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹித் ராணா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 33.1 ஓவர்களில் ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஜிம்பாப்வே 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
வங்கதேச அணியில் நுருல் ஹாசன் அதிகபட்சமாக 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, தௌஹித் ஹிரிடாய் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், பிளெஸ்ஸிங் முசராபானி மற்றும் நியூமேன் நியாம்ஹுரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூமேன் நியாம்ஹுரிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Zimbabwe won the first ODI against Bangladesh by 25 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.