ஆர்சிபி ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! டி.கே. சிவக்குமார் விமர்சனம்!
ஆர்சிபி ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக டி.கே. சிவக்குமார் விமர்சித்திருப்பது பற்றி...
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Advertisement
Advertisement
இந்த வெற்றியை கர்நாடகம் முழுவதும் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பெங்களூரு ரசிகர்கள் தங்கள் சொந்த மண்ணில் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் போனது குறித்து டி.கே. சிவக்குமார் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
”இறுதிப் போட்டி பெங்களூருவில்தான் நடைபெற்றிருந்திருக்க வேண்டும். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால், அவர்கள் வேறொரு இடத்தில் போட்டியை நடத்தியிருக்கிறார்கள். இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.
தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டி.கே. சிவக்குமார்,
“தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி ஆர்சிபி வரலாறு படைத்துள்ளது. மன உறுதி, நிதானம் மற்றும் உண்மையான வெற்றியாளர்களுக்குரிய வலிமையுடன் மீண்டும் ஒருமுறை பெங்களூருவைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
அணியின் வீரர்கள், உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு மாநகரில் கடந்த ஆண்டில், ஜூன் 4-இல் நடைபெற்ற ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இந்த விபரீதத்தை கருத்தில்கொண்டு, அதைப்போன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பொது இடங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் எல்இடி திரைகள் அமைத்து ஐபிஎல் இறுதி ஆட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.