டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியைப் பற்றி...
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பஞ்சாபின் நியூ சண்டீகர் முல்லான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அறிமுக வீரர் மானவ் சுதரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, ஃபாலோ-ஆன் ஆன ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரரான மானவ் சுதர் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையும் நிகழ்த்தியுள்ளது.
இதுவரை இந்தியாவின் சாதனைகள்
ஆப்கானிஸ்தான் - இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் (2026 - முல்லான்பூர்)
மேற்கிந்தியத் தீவுகள் - இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் (2018 - ராஜ்கோட்)
ஆப்கானிஸ்தான் - இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் (2018 - பெங்களூரு)
வங்கதேசம் - இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் (2007 - மிர்பூர்)
இலங்கை - இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் (2017 - நாக்பூர்)
இந்திய மண்ணில் மிகப்பெரிய வெற்றி
1958 ஆம் ஆண்டில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததே இந்திய மண்ணில் பதிவான மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகத் தொடர்கிறது.
ஆசிய அணிகளில்...
2002-ல் லாகூரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் மற்றும் 324 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி பெற்றது ஆசிய அணிகளின் சாதனையாகத் தொடர்கிறது.