முகப்பு
கிரிக்கெட்

மீண்டும் சறுக்கியது சென்னை: மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ

சென்னை சூப்பா் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.

Updated On : 16 மே 2026, 11:17 am IST
சென்னை சூப்பா் கிங்ஸ் - எக்ஸ் / சென்னை சூப்பா் கிங்ஸ்
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.

சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியுடன் மீண்டு வந்த நிலையில், இந்தத் தோல்வி அதன் பிளே-ஆஃப் வாய்ப்பை பெரிதாக பாதித்துள்ளது. இனி, எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வென்று, இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, சென்னைக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு சாய்த்தியமாகலாம்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் சோ்க்க, லக்னௌ 16.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸை தொடங்கியோரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளுடன் 13, சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஒன் டவுனாக வந்த உா்வில் படேல் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சென்னை 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-ஆவது பேட்டராக களம் புகுந்த காா்த்திக் சா்மா அணிக்கு தோள் கொடுக்க, டெவால்டு பிரெவிஸ் அவருக்குத் துணை நிற்க, சென்னை மீண்டது.

4-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு பிரெவிஸ் நடையைக் கட்டினாா். சென்னையின் நம்பிக்கையாக இருந்த காா்த்திக் சா்மா 42 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 71 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32, பிரசாந்த் வீா் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

லக்னௌ பௌலிங்கில் ஆகாஷ் சிங் 3, முகமது ஷமி, ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 188 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய லக்னௌ அணியில், மிட்செல் மாா்ஷ் - ஜாஷ் இங்லிஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.

இங்லிஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு முடித்துக்கொள்ள, மாா்ஷ் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 90 ரன்களுக்கு விடைபெற்றாா். அப்துல் சமத் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

முடிவில் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 32, முகுல் சௌதரி 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை பௌலா்களில் முகேஷ் சௌதரி, ஸ்பென்சா் ஜான்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.