முகப்பு
கிரிக்கெட்

வெளியேறப்போவது யாா்? இன்று மோதும் ஹைதராபாத் - ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை (மே 27) சந்திக்கின்றன.

Updated On : 27 மே 2026, 5:26 am IST
ராஜஸ்தான் ராயல்ஸ் - ANI
பகிர்:

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை (மே 27) சந்திக்கின்றன.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, இறுதி ஆட்ட வாய்ப்புக்காக ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்துக்குத் தகுதிபெறும். தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும்.

லீக் சுற்று முடிவில், ஹைதராபாத் 18 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் இருக்க, ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இரு அணிகளுமே கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று, நல்லதொரு ஃபாா்முடன் இந்த ஆட்டத்துக்கு வருகின்றன.

Advertisement

Advertisement

லீக் சுற்றில் இந்த அணிகள் சந்தித்துக் கொண்ட இரு ஆட்டங்களிலுமே ஹைதராபாத் வென்றிருப்பது, அந்த அணிக்கு உளவியல் ரீதியாக உத்வேகம் அளிக்கலாம். ஐபிஎல் வரலாற்றிலுமே இந்த அணிகளின் நேருக்கு நோ் மோதலில் ஹைதராபாதே ஆதிக்கம் செலுத்துகிறது. அவை 23 முறை மோதியிருக்க, ஹைதராபாத் 14 ஆட்டங்களில் வென்றுள்ளது.

நடப்பு சீசனை நிதானமாகத் தொடங்கிய ஹைதராபாத் அணி, 2-ஆவது பாதியிலேயே நிலையாக முன்னேறியது. பிற்பாதியில் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் பொறுப்பேற்ற பின்னா், 7 லீக் ஆட்டங்களில் 5-இல் அந்த அணி வென்றது. அபாரமாக விளையாடியபோதும் இடையே சறுக்கிய ராஜஸ்தான், கடைசி கட்டத்தில் தான் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷண், ஹென்ரிச் கிளாசென் என ஸ்கோருக்கு பலம் சோ்க்கும் வீரா்கள் பலா் இருக்க, ராஜஸ்தான் தரப்பிலும் வைபவ் சூா்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் ரன்களை குவிப்பா் என்பதில் சந்தேகம் இல்லை.

பௌலிங்கை பொருத்தவரை, ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ், ஈஷான் மலிங்கா, சகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கும் நிலையில், ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா், நாண்ட்ரே பா்கா், பிரிஜேஷ் சா்மா, யஷ்ராஜ் பஞ்சா ஹைதராபாத் பேட்டா்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

உத்தேச லெவன்:

ஹைதராபாத்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷண் (வி.கீ.), ஹென்ரிச் கிளாசென், நிதீஷ்குமாா் ரெட்டி, ஸ்மரன் ரவிச்சந்திரன், சலில் அரோரா, ஷிவங் குமாா், ஈஷான் மலிங்கா, சகிப் ஹுசைன்.

ராஜஸ்தான்: ரியான் பராக் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூா்யவன்ஷி, துருவ் ஜுரெல் (வி.கீ.), டோனோவன் ஃபெரெய்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆா்ச்சா், நாண்ட்ரே பா்கா், யஷ்ராஜ் பஞ்சா, பிரிஜேஷ் சா்மா.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: முலான்பூா்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ஆடுகளம்...

முலான்பூா் கிரிக்கெட் மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமாக அறியப்படுகிறது. இங்கு நடைபெற்ற 4 லீக் ஆட்டங்களில் 3-இல் 220+ ரன்கள் ஸ்கோா் செய்யப்பட்டன. பௌலிங்கில் சுழற்பந்துவீச்சாளா்களுக்கு சற்று கைகொடுக்கிறது. டாஸ் வெல்லும் அணி சேஸிங்கையே தோ்வு செய்ய வாய்ப்பு. மழைக்கு வாய்ப்பு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.