✕
முகப்பு

ஆரம்பத்தில் விமர்சனங்கள், தற்போது மரியாதை; மகன் ஆர்யவீருக்கு சேவாக் பாராட்டு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியதால் மகன் ஆர்யவீர் மரியாதையை சம்பாதித்துள்ளதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

15 வினாடிகள் முன்பு
வீரேந்திர சேவாக், ஆர்யவீர் சேவாக் - படங்கள்: பிடிஐ, பிசிசிஐ
பகிர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியதால் மகன் ஆர்யவீர் மரியாதையை சம்பாதித்துள்ளதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றதுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

ஆசிய கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு 361 ரன்கள் குவித்த ஆர்யவீர் சேவாக் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் ஆர்யவீர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆர்யவீர் அவரது துணைப் பெயரால் விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும், ஆசிய கோப்பை தொடருக்குப் பிறகு அவர் மரியாதையை சம்பாதித்துள்ளதாகவும் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஆர்யவீர் சிறப்பான பங்களிப்பை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அணிக்காக அவரது பங்களிப்பை வழங்கியது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வெறும் ரன்கள் மட்டும் எடுக்கவில்லை. பெரிய அளவில் ரன்களும் குவித்துள்ளார். இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உனக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால், நீ பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும் என நான் எப்போதும் ஆர்யவீருடன் பேசுவேன். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆர்யவீர் அதனை சாதித்துள்ளார். நீ நன்றாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கும் வரை உன்னுடைய துணைப் பெயரால் மட்டுமே அறியப்படுவாய் என அவரிடம் கூறுவேன். ஆர்யவீர் அவரது துணைப் பெயரால் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்திலும் இதுபோன்ற விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளலாம். ஆனால், ஆர்யவீரின் திறமை தற்போது அனைவருக்கும் தெரிகிறது. அவரால் நன்றாக விளையாட முடியும் என்பதை அனைவரும் பார்த்துள்ளார்கள். என்னைப் பொருத்தவரை, ஆர்யவீர் அவரது கிரிக்கெட் பயணத்தில் தேசத்தின் அன்பை மட்டுமே பெறுவார் என்றார்.

summary

Virender Sehwag has stated that his son, Aryavir, has earned respect by performing well and contributing to his team's victory in the Asia Cup cricket tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.