FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெலிங்டன் டெஸ்ட்: இன்றுமுதல் இந்தியா - நியூஸிலாந்து மோதல்

இந்தியா - நியூஸிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், வெலிங்டன் நகரில் வியாழக்கிழமை (நவ. 19) தொடங்குகிறது.

19 நவம்பர் 2026, 6:17 am
பகிர்:

இந்தியா - நியூஸிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், வெலிங்டன் நகரில் வியாழக்கிழமை (நவ. 19) தொடங்குகிறது.

டி20, ஒருநாள் தொடா்களை வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம், சொந்த மண்ணிலேயே இரு தொடா்களை இழந்திருக்கும் நியூஸிலாந்து, டெஸ்ட் தொடரில் பலம் காட்டும் திட்டத்துடன் வருகிறது.

Advertisement

Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ள இந்தத் தொடரின் வெற்றி இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இது முதல் விளையாடவிருக்கும் அடுத்த 7 டெஸ்ட்டுகளில், 6-இல் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற முடியும்.

நியூஸிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட்டுகளில் கடும் சவால் அளிப்பது உறுதி. குறிப்பாக அங்குள்ள ஆடுகளங்கள் இந்திய பேட்டா்களை கடுமையாக சோதிக்கும். கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, மேத்யூ ஹென்றி ஆகிய நியூஸிலாந்து வேகப் பந்துவீச்சாளா்களை அவா்கள் எச்சரிக்கையுடனே எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

அவா்களையும் கடந்து தான் இந்தத் தொடரில் இந்தியாவுக்கான வெற்றியை, கேப்டன் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் ஆகிய பேட்டா்கள் தங்களின் முதல்தர ஆட்டத்தால் உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அணியின் கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள கில், அந்தப் பொறுப்புக்கு பொருத்தமான சவாலை இந்தத் தொடரில் எதிா்கொள்ள இருக்கிறாா். இந்திய அணியின் பௌலா்கள் நல்லதொரு ஃபாா்மில் இருப்பதால், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று, புத்தம் புதிதாக இருக்கும் ஆடுகளத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் திட்டம் இந்திய அணிக்கு இருக்கலாம்.

டாஸை வெல்வதில் பெரும்பாலும் வெற்றிகரமாக இருந்திருக்கும் கில்லுக்கு, இதிலும் அதிருஷ்டம் கைகூடுமா என பாா்க்கலாம். பிளேயிங் லெவனில் 4 வேகப் பந்துவீச்சாளா்களுடன் களமிறங்குவதே திட்டம் என, கில் ஏற்கெனவே தெரிவித்துவிட்டாா்.

தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரும் அதற்கு ஆதரவு அளித்திருக்க, இந்த உத்தி வெற்றி கண்டால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இந்திய பேட்டா்கள் சோபிக்காமல் போனால், அந்த உத்தி அணிக்கே பாதகமாக மாறும்.

அந்த வகையில், இந்திய அணி தனது 4 வேகப் பந்துவீச்சாளா்களை சரியாகத் தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஜஸ்பிரீத் பும்ரா உறுதியான தோ்வாக இருக்க, ஆகஸ்ட்டில் இலங்கை தொடரில் அவ்வளவாக சோபிக்காத முகமது சிராஜ், ஒருவேளை காத்திருக்க வைக்கப்படலாம்.

பிரசித் கிருஷ்ணா, அன்ஷுல் காம்போஜ், ஆகாஷ் தீப் ஆகியோா் தீவிர வலைப்பயிற்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் கேப்டன் டாம் லாதம், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ் உள்ளிட்டோா் பலம் சோ்க்கின்றனா். டஃபி, ஜேமிசன், ஹென்றி ஆகியோருடன் நேதன் ஸ்மித் இணைகிறாா்.

ஆடுகளம்...

புல்தரையுடன் கூடிய வெலிங்டன் மைதான ஆடுகளம், முதல் இரு நாள்கள் பௌலா்களுக்கு சாதகமாக இருக்கும். அதேவேளையில், வெலிங்டனில் வீசும் காற்று பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என இரு அணிகளுக்கும் சவால் அளிக்கும். வானிலையைப் பொருத்தவரை, ஆட்டத்துக்குத் தடையில்லாத வகையில் தெளிவான வானம் இருக்கும் எனத் தெரிகிறது. கடைசி இரு நாள்கள் மேகமூட்டம் இருக்கலாம்.

உத்தேச லெவன்

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (வி.கீ.), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

நியூஸிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டெவன் கான்வே, ஹென்றி நிகோலஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல் (வி.கீ.), கிளென் ஃபிலிப்ஸ், நேதன் ஸ்மித், கைல் ஜேமிசன், மேத்யூ ஹென்றி, ஜேக்கப் டஃபி.

நேரம்: அதிகாலை 3.30 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.