தனியொருவராக போராடிய மிட்செல் மார்ஷின் சதம் வீண்; டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 29) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
சாம் கரண் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 182 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால் மற்றும் நியூரின் டொனால்டு தலா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹாரி ப்ரூக் 9 ரன்கள் மற்றும் டாம் பாண்டன் 3 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, ஜோர்டான் காக்ஸ் மற்றும் ஜேம்ஸ் கோல்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சற்று தாக்குப் பிடித்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. இருப்பினும், ஜோர்டான் காக்ஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் கோல்ஸ் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், பின்வரிசையில் சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய சாம் கரண் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 28 பந்துகளில் 50* ரன்கள் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார். ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில் 20* ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். லியம் டாஸன் 23 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ரைலி மெரிடித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா, ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் நிகில் சௌதரி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
மிட்செல் மார்ஷின் சதம் வீண்; தொடரை வென்ற இங்கிலாந்து!
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷினைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தினார். கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற மிட்செல் மார்ஷ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 57 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். சாம் ஹார்ப்பர் 18 ரன்கள், நிகில் சௌதரி மற்றும் டிம் டேவிட் தலா 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இளம் வீரர் ஹென்றி க்ரோகோம்ப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கடைசி ஓவரில் அவர் மிட்செல் மார்ஷின் விக்கெட்டினை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவரைத் தொடர்ந்து, சாம் கரண், லியம் டாஸன், அடில் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி கடைசி வரை அணியின் வெற்றிக்காகப் போராடிய கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.