தோல்வி எதிரொலி... பாகிஸ்தான் அணித் தேர்வுக் குழுவிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்!
பாகிஸ்தான் அணித் தேர்வுக் குழுவிலிருந்து முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவிலிருந்து முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ராஜிநாமா செய்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் ஹெட்டிங்லே திடல்களில் நடைபெற்ற போட்டிகள் முறையே இன்னிங்ஸ் - 103 ரன்கள் மற்றும் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது.
இவ்விரு அணிகளும் மோதும் 3-ஆவது மற்றும் கடைசிப் போட்டி பிர்மிங்காம் எட்ஜ்பேஸ்டனில் வருகிற செப். 3 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் டெஸ்ட் பயிற்சியாளர்கள் சர்ஃபாஸ் அகமத், உமர் குல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
நட்சத்திர வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகிய 5 வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதேவேளை, போட்டிகளில் விளையாடாமலேயே ஆமிர் ஜமால் மற்றும் முகமது அவைஸ் ஜாஃபர் உள்ளிட்ட 7 பேரும் நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடர் நடைபெற்றிருக்கும் வேளையில், தொடரின் பாதியிலிருந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவிலிருந்து முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
2017-ல் பாகிஸ்தானின் டெஸ்ட் கேப்டனாக ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். 2019-ஆம் ஆண்டில் தலைமைப் பயிற்சியாளராகவும் தலைமைத் தேர்வாளராகவும் நியமிக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் தலைமைத் தேர்வாளர் பதவியிலிருந்து விலகிய அவர், அதன்பின்னர் 2021-ஆம் ஆண்டில் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்தும் அவர் ராஜிநாமா செய்திருந்தார்.
நடப்பாண்டு மார்ச்சில், ஆகிப் ஜாவேத், சர்பராஸ் அகமது மற்றும் அசாத் ஷஃபிக் ஆகியோருடன் மிஸ்பா உல் ஹக்கும் நான்கு பேர் கொண்ட தேசிய தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மிஸ்பா உல் ஹக்கின் ராஜிநாமாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் ஏற்கவில்லை என்றும், லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் ஆலோசகர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Misbah-ul-Haq has resigned from Pakistan's selection committee after reportedly being left out of the discussions over the seven squad changes for the third and final Test against England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.