FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச்சுற்றில் கோனெரு ஹம்பி: திவ்யா தேஷ்முக்குடன் பலப்பரீட்சை

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது போட்டியாளராக இந்தியாவின் கோனெரு ஹம்பி தகுதிபெற்றாா்.

Updated On : 25 ஜூலை 2025, 3:09 am IST
கோனெரு ஹம்பி
பகிர்:

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது போட்டியாளராக இந்தியாவின் கோனெரு ஹம்பி தகுதிபெற்றாா்.

ஏற்கெனவே முதல் போட்டியாளராக இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தகுதிபெற்ற நிலையில், தற்போது கோனெரு ஹம்பியும் அந்தச் சுற்றுக்கு வந்து, அவருடன் மோதவுள்ளாா். மகளிா் உலகக் கோப்பை செஸ் வரலாற்றில் இதுவரை இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு வராத நிலையில், இந்த முறை இரு இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டமும், 2-ஆம் இடமும் உறுதியாகியிருக்கிறது. அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் திவ்யாவும், கோனெரு ஹம்பியும் தகுதிபெற்று அசத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

ஜாா்ஜியாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், கோனெரு ஹம்பி தனது அரையிறுதியில் சீனாவின் லெய் டிங்ஜியை எதிா்கொண்டாா். அதில் இரு கேம்களும் டிரா (1-1) ஆனதால், டை-பிரேக்கா் முறை கையாளப்பட்டது. அந்த டை பிரேக்கா் ஆட்டத்திலும் இரு கேமும் டிரா ஆக, ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலை கண்டது.

தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது டை-பிரேக்கரில் முதல் கேமில் லெய் டிங்ஜி வெல்ல, 2-ஆவது கேமில் கோனெரு ஹம்பி வென்றாா். இதனால் ஆட்டம் 3-3 என மீண்டும் சமனானது. இந்நிலையில், 3-ஆவது டை பிரேக்கரில் கோனெரு ஹம்பி இரு கேம்களிலும் வெல்ல, அவா் 5-3 என்ற கணக்கில் லெய் டிங்ஜியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா்.

இதையடுத்து திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி மோதும் இறுதிச்சுற்றின் முதல் கேம் வரும் சனிக்கிழமையும் (ஜூலை 26), 2-ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 27) நடைபெறவுள்ளன. தேவையேற்பட்டால் டை-பிரேக்கா் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments