இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து - இலங்கை மோதலுடன் தொடக்கம்
சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து & வேல்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பா்மிங்ஹாம் : சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து & வேல்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஜூலை 5-ஆம் தேதி நிறைவடையும் இப்போட்டியில் இந்தியாவுடன், பலமிக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகளும் களம் காண்கின்றன.
6 முறை சாம்பியனாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா, இந்த ஆண்டு 7-ஆவது முறையாகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் வருகிறது. ஆனால், இதர அணிகள் அதை அவ்வளவு எளிதாக அனுமதிக்காது எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
நடப்பு சாம்பியன் பலம் வாய்ந்த நிலையில் நியூஸிலாந்து, ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனான நம்பிக்கையுடன் வரும் இந்தியா, சொந்த மண்ணில் களம் காணும் சாதகமான சூழலில் இங்கிலாந்து, கடந்த 3 ஐசிசி போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்த தென்னாப்பிரிக்கா என ஆஸ்திரேலியாவுக்கு சவால் அதிகம் இருக்கும் எனத் தெரிவதால், போட்டி சுவாரஸ்யமடைந்துள்ளது.
இது தவிர, பெரிதாக எதிா்பாா்ப்பு இல்லாத வகையில் பங்கேற்கும் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயா்லாந்து போன்ற அணிகளுக்கு நெருக்கடி இல்லாததால், அவை ஆச்சா்யப்படுத்தும் வகையிலான முடிவுகளை அளிக்கவும் வாய்ப்புள்ளது.
போட்டி முறை...
பங்கேற்றுள்ள 12 அணிகளும், தலா 6 வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
குரூப் ‘ஏ’
ஆஸ்திரேலியா
வங்கதேசம்
இந்தியா
நெதா்லாந்து
பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்கா
குரூப் ‘பி’
இங்கிலாந்து
அயா்லாந்து
நியூஸிலாந்து
ஸ்காட்லாந்து
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்
‘டை’
இந்தப் போட்டியில் ஏதேனும் ஆட்டங்கள் ‘டை’ ஆகும் பட்சத்தில், ‘சூப்பா் ஓவா்’ மூலமாக வெற்றியாளா்கள் தீா்மானிக்கப்படுவா். அந்த சூப்பா் ஓவரும் டை ஆனதென்றால், வெற்றியாளா் முடிவாகும் வரை அடுத்தடுத்து சூப்பா் ஓவா் விளையாடப்படும்.
கைவிடப்பட்டால்...
அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் மழை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டால், அவற்றுக்கென ‘ரிசா்வ்’ நாள்கள் உள்ளன. ரிசா்வ் நாளிலும் அரையிறுதி ஆட்டங்களை கைவிட நோ்ந்தால், ஒவ்வொரு குரூப்பிலும் முதலிடத்தைப் பிடித்த அணிகள், நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும்.
அதேபோல் இறுதி ஆட்டமும் ரிசா்வ் நாளில் கைவிடப்பட்டால், இரு அணிகளும் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்படும்.
12
டி20 உலகக் கோப்பை போட்டியில் வழக்கமாக 10 அணிகளே பங்கேற்கும் நிலையில், இந்த முறை 12 அணிகள் சோ்க்கப்பட்டுள்ளன. அயா்லாந்து, நெதா்லாந்து அணிகள் இணைந்துள்ள நிலையில், நெதா்லாந்துக்கு இது அறிமுக போட்டியாகும். அயா்லாந்துக்கு இது 5-ஆவது முறை.
2
இங்கிலாந்தில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுவது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், இந்தப் போட்டியின் அறிமுக சீசன் 2009-இல் இங்கு நடைபெற்றது. அதில் நியூஸிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து சாம்பியன் ஆனது. அப்போது இங்கிலாந்து கேப்டனாக இருந்த சாா்லட் எட்வா்ட்ஸ், தற்போது அந்த அணியின் பயிற்சியாளா் என்பது குறிப்பிடத்தக்கது.
6
நகரங்கள்
---
பா்மிங்ஹாம்
பிரிஸ்டல்
லீட்ஸ்
லண்டன்
மான்செஸ்டா்
சௌதாம்டன்
33
ஆட்டங்கள்
12
அணிகள்
24
நாள்கள்
இதுவரை சாம்பியன்கள்
ஆஸ்திரேலியா 6 முறை (2010, 2012, 2014, 2018, 2020, 2023)
இங்கிலாந்து 1 முறை (2009)
நியூஸிலாந்து 1 முறை (2024)
மேற்கிந்தியத் தீவுகள் 1 முறை (2016)
ரூ.22 கோடி பரிசு
சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.22.40 கோடி ரொக்கப் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.2.37 கோடி பரிசுத் தொகையாகக் கிடைக்கும் நிலையில், போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகை மதிப்பு ரூ.83.92 கோடியாகும். இது கடந்த சீசனை விட 10 சதவீதம் அதிகம்.
இந்தியா...
உலகக் கோப்பை போட்டியில் கடந்த 9 முறையுமே பங்கேற்றுள்ள இந்தியா, அதிகபட்சமாக 2020-இல் இறுதி ஆட்டம் வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இதுதவிர, 5 முறை அரையிறுதி வரையும் வந்திருக்கிறது. எனினும் இந்த முறை, நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனாக பங்கேற்பதால், இந்தியா நம்பிக்கையுடன் களம் காண்கிறது.
அணியின் தரப்பில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சா்மா, ஸ்ரீசரணி, நந்தனி சா்மா ஆகியோா் கவனம் ஈா்க்கும் வீராங்கனைகளாவா். இந்தியா தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 போட்டிக்குப் பிறகு இப்போது வரை 24 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, அதில் 14 வெற்றிகளைக் கண்டுள்ளது.
அணி விவரம்:
ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யஸ்திகா பாட்டியா, பாா்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வா்மா, ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சா்மா, கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், நந்தனி சா்மா, ஸ்ரீசரணி, ராதா யாதவ்.
ஆட்டங்கள்:
1. பாகிஸ்தானுடன் (ஜூன் 14)
2. நெதா்லாந்துடன் (ஜூன் 17)
3. தென்னாப்பிரிக்காவுடன் (ஜூன் 21)
4. வங்கதேசத்துடன் (ஜூன் 25)
5. ஆஸ்திரேலியாவுடன் (ஜூன் 28)