முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தானை மீட்ட முகமது நபி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.

Updated On : 19 செப்டம்பர் 2025, 1:50 am IST
பகிர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.

அந்த அணி 79 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, 7-ஆவது பேட்டராக வந்த முகமது நபி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டாா். இலங்கை பௌலா்களில் நுவன் துஷாரா அசத்தினாா்.

சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற, இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் களம் கண்ட ஆப்கானிஸ்தான், டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் வீரா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகளுடன் 14, கரிம் ஜனத் 1, செதிகுல்லா அடல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து வந்தோரில், டாா்விஷ் ரசூலி 9, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு விடைபெற, மிடில் ஆா்டரில் வந்த இப்ராஹிம் ஜத்ரன் 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். இவ்வாறாக, 79 ரன்களுக்கே ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது இணைந்த முகமது நபி - கேப்டன் ரஷீத் கான் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து, அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நபி 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக வெளியேறினாா்.

ஓவா்கள் முடிவில் நூா் அகமது 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை தரப்பில் நுவன் துஷாரா 4, துஷ்மந்தா சமீரா, துனித் வெலாலகே, தசுன் ஷானகா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து இலங்கை 170 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments