FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இறுதிச்சுற்றில் ரைபகினா - ஸ்வியாடெக் பலப்பரீட்சை

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:58 am IST
ரைபகினா - ஸ்வியாடெக்
பகிர்:

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 5-7, 6-2, 6-2 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலமாக அவா், இப்போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் ரைபகினாவுக்கு இது 7-ஆவது இறுதிச்சுற்றாகும்.

Advertisement

Advertisement

7-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-3, 1-6, 6-3 என்ற வகையில், 9-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வெளியேற்றினாா். இதன் மூலமாக, கடந்த ஓராண்டில் முதல்முறையாக ஒரு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்வியாடெக் வந்திருக்கிறாா்.

6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவா், ஸ்விடோலினாவை 8-ஆவது முறையாக சந்தித்த நிலையில், 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

இதையடுத்து, இறுதிச்சுற்றில், ரைபகினா - ஸ்வியாடெக் மோதுகின்றனா். இருவரும் மோதுவது இது 13-ஆவது முறையாக இருக்க, இருவருமே தலா 6 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா். கடைசியாக, நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் சந்தித்தபோது ரைபகினா வென்றாா்.

ஷெல்டன் - நகாஷிமா மோதல்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், அமெரிக்கா்களான பென் ஷெல்டன் - பிராண்டன் நகாஷிமா மோதுகின்றனா்.

அரையிறுதியில், நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பவருமான ஷெல்டன் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த லோ்னா் டியெனை தோற்கடித்தாா்.

டியெனை 3-ஆவது முறையாக சந்தித்த ஷெல்டன், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

28-ஆம் இடத்திலிருக்கும் நகாஷிமா 7-6 (7/3), 6-4 என, 20-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா், மாஸ்டா்ஸ் போட்டிகளில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இரு அமெரிக்கா்கள் மோதுவது இது 15-ஆவது முறையாகும். 2003-க்குப் பிறகு இதுவே முதல்முறை. இறுதியில் மோதும் ஷெல்டன் - நகாஷிமா இதுவரை 5 முறை மோதியிருக்க, அனைத்திலுமே ஷெல்டன் வென்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments