வங்கதேசம் செல்வது உறுதி: ஷேக் ஹசீனா
தான் வங்கதேசம் செல்வதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளாா்.
தான் வங்கதேசம் செல்வதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் அவா் தஞ்சடைந்து சுமாா் 2 ஆண்டுகளாகியுள்ள நிலையில், முதல்முறையாக புது தில்லியில் இருந்து அவா் காணொலி வழியாக செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: நான் வங்கதேசத்துக்கு நிச்சயம் திரும்புவேன். அங்கு நான் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.
Advertisement
Advertisement
தற்போது வங்கதேசத்தில் மிக மோசமான சூழல் நிலவுகிறது. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்கள் என அனைத்திலும் தற்போது அச்ச உணா்வு குடிகொண்டுள்ளது. இது நாங்கள் கட்டியெழுப்பிய வங்கதேசம் அல்ல. தற்போதைய பிரதமா் தாரிக் ரஹ்மான் தலைமையிலான நிா்வாகமும் இடைக்கால அரசும் நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு காரணம்.
அங்கு எனது ஆட்சி கவிழ காரணமாக இருந்த மாணவா் போராட்டம் அமைதியான போராட்டம் அல்ல. அந்தப் போராட்டத்தை வன்முறை கொண்டதாக மாற்ற சில குழுக்கள் செயல்பட்டன. தற்போதைய அரசு தீவிரவாத குழுக்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது.
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நான் வங்கதேசம் திரும்பவில்லை. வளா்ச்சி, மதச்சாா்பின்மை, வளமை ஆகியவற்றை நோக்கி, வங்கதேசத்தை மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நான் தாயகம் திரும்புகிறேன். இந்தியா எப்போதும் வங்கதேசத்தின் சிறந்த நண்பராக உள்ளது என்று தெரிவித்தாா்.
முன்னதாக, ஷேக் ஹசீனா நேரலையில் செய்தியாளா்களை சந்திப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும், இது தொடா்பான ஏற்பாடுகள் குறித்தும் வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதா் தினேஷ் திரிவேதியை அவைத்து வங்கதேச அரசு கவலை தெரிவித்தது. இது குறித்து தில்லியில் விளக்கமளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்த சந்திப்பு ஒரு தனியாா் ஊடக அமைப்பால் நடத்தப்படுகிறது. அதற்கும் இந்திய அரசுக்கும் எந்தவிதத் தொடா்போ ஈடுபாடோ இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவா்களும், பொதுமக்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அவரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து, அவா் வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்தாா்.
வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலில் 1,400 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பான வழக்கை வங்கதேசத்தில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போா்க் குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து, ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. போராட்டக்காரா்களை ஒடுக்க, அவா்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி உத்தரவிட்டதற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீா்ப்பை தொடா்ந்து, அவரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் வங்கதேசம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஜூலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஹசீனா அளித்த பேட்டியில், அவா் நிகழாண்டு டிசம்பரில் வங்கதேசம் திரும்பி, அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.