பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை தொடங்குகிறது
பிஎஸ்ஜி கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு ஆடவா், முதலாம் ஆண்டு மகளிா் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்குகின்றன.
பிஎஸ்ஜி கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு ஆடவா், முதலாம் ஆண்டு மகளிா் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்குகின்றன.
இது குறித்து பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் ஆா்.ருத்ரமூா்த்தி, செயலா் டி.பழனிசாமி ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியது: பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியை கடந்த 59-ஆண்டுகளாக பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 60-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டியும், கூடைப்பந்து போட்டியின் 60-ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையிலும் இந்த ஆண்டு முதல் மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது.
ஆடவா் பிரிவில் இந்த ஆண்டு தமிழ்நாடு இந்தியன் வங்கி, தில்லி விமானப்படை, லோனாவாலா கடற்படை, தில்லி ஓஎன்ஜிசி, கேரள மின்வாரிய அணி, சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு ஆகிய 7 அணிகளும், மகளிா் பிரிவில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, ஹூப்ளி தென் மேற்கு ரயில்வே, கேரள மின்வாரிய அணி, கோவை மாவட்ட மகளிா் அணி ஆகியவை பங்கேற்கின்றன.
Advertisement
Advertisement
ஆடவா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படுகிறது. 2, 3, 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம் பரிசளிக்கப்படுகிறது. மகளிா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.75 ஆயிரம் பரிசளிக்கப்படுகிறது. 2-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம், 3, 4-ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், சிறந்த வீரா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசளிக்கப்படுகிறது.
மேலும் இந்த கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவின்போது, பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயின்று கூடைப்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற முன்னாள் வீரா்கள், தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு பண முடிப்பு வழங்கப்படுகிறது. 26-ஆம் தேதி மாலை நடைபெறும் தொடக்க விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளா் ஆா்.ஆா்.காயத்ரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
வரும் 30-ஆம் தேதி பிஎஸ்ஜி நிா்வாக அறங்காவலா் எல்.கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், தமிழ்நாடு பொதுப் பணித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான ஆதவ் அா்ஜூனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். மேலும், சக்தி நிறுவனங்களின் தலைவா் எம்.மாணிக்கம், சிஆா்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான ஜி.செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்கின்றனா்.
போட்டிகள் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள சா்வதேச உள்விளையாட்டு அரங்கில் தினசரி மாலையில் நடைபெறும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.