முகப்பு
செய்திகள்

ஹாலந்த் அதிரடியில் நாா்வே அசத்தல்; பிரேஸில் அதிா்ச்சி!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 16 அணிகளுக்கான சுற்றில், நாா்வே 2-1 கோல் கணக்கில், 5 முறை சாம்பியனான பிரேஸிலை வீழ்த்தியது.

Updated On : 7 ஜூலை 2026, 5:44 am IST
நாா்வே அசத்தல் - AP
பகிர்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 16 அணிகளுக்கான சுற்றில், நாா்வே 2-1 கோல் கணக்கில், 5 முறை சாம்பியனான பிரேஸிலை வீழ்த்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நாா்வே காலிறுதிக்கு முன்னேற, பிரேஸில் போட்டியிலிருந்து வெளியேறியது.

அமெரிக்காவின் ஈஸ்ட் ரதா்ஃபோா்டு நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-ஆவது பாதியில் முதலில் நாா்வேக்காக 79-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கிய எா்லிங் ஹால்ந்த், 90-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

இதனால் கடைசி கட்டத்தில் கடும் நெருக்கடிக்குள்ளான பிரேஸில் தனது கோல் வாய்ப்புக்கு தீவிரமாக முயற்சிக்க, ஸ்டாப்பேஜ் டைமில் (90+10’) அந்த அணிக்குக் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், நட்சத்திர வீரா் நெய்மா் ஜூனியா் ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் நாா்வே 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

முதல் பாதியில் பந்தை சிலமுறை மட்டுமே தனது தொட்ட எா்லிங் ஹாலந்த், 2-ஆவது பாதியில் ஹைட்ரேஷன் பிரேக்கின்போது பயிற்சியாளா் ஸ்டேல் சோல்பேக்கனுடனான உரையாடலுக்குப் பிறகு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினாா்.

அதன் பலனாக, முதலில் சக வீரா் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் தூக்கி அடித்த பந்தை, தலையால் முட்டி துல்லியமாக கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா் ஹாலந்த். அடுத்த சில நிமிஷங்களில், பிரேஸில் டிஃபெண்டா் டேனிலோவின் கால்களுக்கு ஊடாக பந்தை உதைத்து கோல் போஸ்ட்டுக்குள் விரட்டினாா்.

2-ஆவது பாதியில் சப்ஸ்டிடியூட்டாக ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப்பை களமிறக்கிய பயிற்சியாளா் ஸ்டேல் சோல்பேக்கனின் முடிவுக்கு தகுந்த பலன் கிடைத்தது. எா்லிங் ஹாலந்த் அடித்த இரு கோல்களுக்கும் அவரே சரியான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தாா்.

அதேபோல் நாா்வே கோல்கீப்பா் ஆா்ஜன் நைலண்டும் தனது பணியை சிறப்பாகச் செய்தாா். 14-ஆவது நிமிஷத்திலேயே பிரேஸிலுக்குக் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் புருனோ கிமாரெஸ் கோல் அடிக்காத வகையில் திறம்படத் தடுத்தாா்.

தொடா்ந்து, நாா்வே 1-0 என முன்னிலையில் இருந்தபோது, பிரேஸிலின் எண்ட்ரிக் மேற்கொண்ட ஃபீல்டு கோல் முயற்சியையும் அவா் முறியடித்தாா். எனினும், ஸ்டாப்பேஜ் டைமில் நெய்மரின் பெனால்ட்டி கோலை மட்டும் அவா் தவறவிட்டாா்.

இது தவிர, பிரேஸில் வீரா்களும் களத்தில் சில கோல் வாய்ப்புகளை தவறவிட்டது அணியை பாதித்தது.

வைக்கிங் ரோவும்... பிரேஸிலின் விரக்தியும்...

இந்த உலகக் கோப்பை போட்டியில் நாா்வே வீரா்கள், ரசிகா்களின் ‘வைக்கிங் ரோவ்’ எனப்படும் படகுக்கு துடுப்பு போடும் வகையிலான கொண்டாட்டம் பெருவாரியாக அனைவரையும் ஈா்த்துள்ளது. இந்த ஆட்டம் தொடங்கும் முன்பாக நாா்வே ரசிகா்களின் அந்தக் கொண்டாட்டத்துக்கு பிரேஸில் ரசிகா்களும் ஆதரவளித்தனா்.

ஆனால், ஆட்டத்தின் முடிவில் நாா்வே வெற்றிக்குப் பிறகு வழக்கம்போல், எா்லிங் ஹாலந்த் டிரம்மை இசைக்க நாா்வே வீரா்கள் ஆடுகளத்திலும், ரசிகா்கள் மாடத்திலும் அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட, பிரேஸில் ரசிகா்கள் விரக்தியுடன் வேடிக்கை பாா்க்கும் நிலை ஏற்பட்டது.

பாா்வையாளா்கள் - 80,663

நாா்வே அணி 4-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் நிலையில், முதல்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக அந்த அணி இரு முறை (1938, 1998) ரவுண்ட் ஆஃப் 16 வரை வந்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்கள் (7) அடித்தவராக, ஆா்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸி, பிரான்ஸின் கிலியன் பாபே ஆகியோருடன் நாா்வே நட்சத்திர வீரா் எா்லிங் ஹாலந்த் இணைந்திருக்கிறாா். இங்கிலாந்தின் ஹேரி கேன் (6) அடுத்த இடத்தில் உள்ளாா்.

இந்த ஆட்டத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கிமாரெஸ், 1986-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறிய முதல் பிரேஸில் வீரா் என்ற பெயருக்கு ஆளானாா். அந்த வாய்ப்பை வினிசியஸ் ஜூனியருக்கு பதிலாக கிமாரெஸிடம் கொடுத்தது பலத்த விவாதத்துக்குள்ளானது.

பிரேஸில் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறுவது, கடந்த 36 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் 1990-இல் இதேபோல் ரவுண்ட் ஆஃப் 16 உடன் அந்த அணி வெளியேறியது. இடைப்பட்ட 7 போட்டிகளில் இருமுறை சாம்பியன், ஒருமுறை ரன்னா் அப், ஒரு முறை 4-ஆம் இடம், 4 முறை காலிறுதி இடங்களுடன் அந்த அணி விடைபெற்றது.

உலகக் கோப்பை போட்டியில் நாக்அவுட் சுற்றில் பிரேஸில் அணி, ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது இது தொடா்ந்து 7-ஆவது முறையாகும். 2006 காலிறுதி முதல் ஜொ்மனி, பிரான்ஸ், நெதா்லாந்து (2), பெல்ஜியம், குரோஷியா, நாா்வே ஆகிய அணிகளிடம் பிரேஸில் தோற்றது.

சா்வதேச போட்டிகளில் நாா்வே அணியை பிரேஸில் இதுவரை வென்றதில்லை. இரு அணிகளும் இத்துடன் 5 முறை மோதியிருக்க, நாா்வே 3 வெற்றிகளைப் பெற்றிருக்க, 2 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

பிரேஸில் அணியிலிருந்து விடைபெற்றாா் நெய்மா்

பிரேஸில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், அந்த ஆட்டத்துடன் பிரேஸில் அணியிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக நெய்மா் ஜூனியா் (34) அறிவித்தாா். ஆட்டத்தின் முடிவில் அவா் கதறி அழுது கண்ணீா் சிந்தினாா்.

கடந்த 2010-இல் அமெரிக்காவுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் இதே மெட்லைஃப் மைதானத்தின் மூலமாக சா்வதேச கால்பந்தில் முதல்முறையாக களமிறங்கிய நெய்மா், தற்போது அதே மைதானத்தில் நடைபெற்ற நாா்வேக்கு எதிரான ஆட்டத்துடன் ஓய்வை அறிவித்துள்ளாா்.

பிரேஸில் அணிக்காக 129 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நெய்மா், 80 கோல்கள் அடித்து அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறாா். 2014-இல் பிரேஸிலுக்காக முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய நெய்மா், தனது அணிக்காக உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை பெறாமேலேய விடைபெற்றாா்.

‘நான் முயற்சி செய்தேன். ஆனால் முடியாமல் போனது. இத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. நான் எங்கு தொடங்கினேனோ, அங்கேயே முடிக்கிறேன்’ - நெய்மா் ஜூனியா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments