FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் ஜெர்ஸியை மாற்றும் ஆர்ஜென்டீனா! பின்னணியில் ஒரு வரலாற்று காரணம்!

இங்கிலாந்துக்கு எதிரான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதிப் போட்டியை ஆர்ஜென்டீனா விளையாடவுள்ளது.

Updated On : 14 ஜூலை 2026, 9:54 pm IST
ஆர்ஜென்டீனா அணியின் கருநில ஜெர்ஸியில் மெஸ்ஸி
பகிர்:

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதிப் போட்டியை ஆர்ஜென்டீனா விளையாடவுள்ளது. நட்சத்திர வீரரான மெஸ்ஸி முதல்முறையாக இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில், ஆர்ஜென்டீனா அணி நிர்வாகம் தங்களது வழக்கமான ஜெர்ஸியை அணியாமல், கருநீல நிற ஜெர்ஸியை அணிய ஃபிஃபாவிடம் அனுமதி கோரியுள்ளது. இங்கிலாந்தின் வெள்ளை சீருடை காரணமாக வேறுபாடு காட்டுவதற்காக இல்லாமல் வரலாற்று ரீதியான ஞாபகத்தை நினைவூட்டும் விதமாக அதனை அணியவுள்ளது.

1986 கால்பந்து உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கால்பந்து உலகின் சிறந்த வீரரான மரடோனாவின் உலகப்புகழ்பெற்ற ‘கடவுளின் கை’ மற்றும் ‘நூற்றாண்டின் சிறந்த கோல்’ ஆகியவை ஆர்ஜென்டீனாவுக்கு இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுத்தந்தன.

கடவுளின் கை என்றால் என்ன?

அந்தப் போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடிப்பதற்காக மரடோனா பந்தை உதைத்துச் சென்றபோது, இங்கிலாந்து டிஃபென்டர் பந்தை அடிக்க முயல, அது உயரே எழும்பியது.

அப்போது, பந்தை தலையால் முட்ட மரடோனாவும், இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டனும் ஒன்றாகக் குதித்தனர். கோல்கீப்பர் கைகளால் பந்தைத் தட்டிவிடுவதற்குள், 5 1/2 அடி உயரமேயுள்ள மரடோனா, தனது இடது கையால் பந்தை கோல் கம்பத்திற்குள் தள்ளினார்.

கால்பந்து விதிகளின்படி கோல்கீப்பரைத் தவிர வேறு யாரும் கைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், மரடோனா தலையால் தான் கோல் அடித்ததாக தவறாக நினைத்த நடுவர் அதை கோல் என்று அறிவித்தார்.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்கள் மரடோனாவிடம் அந்த போல் கைபட்டுச் சென்றதா அல்லது தலையில் பட்டுச் சென்றதா எனக் கேட்க, அவரோ, "அது கொஞ்சம் மரடோனாவின் தலையாலும், கொஞ்சம் கடவுளின் கையாலும் அடிக்கப்பட்ட கோல்" என்று பதிலளித்தார். அன்று முதல் அது ’கடவுளின் கை’ என்று அழைக்கப்படுகிறது.

நூற்றாண்டின் சிறந்த கோல்

அதேபோட்டியில், அந்த சர்ச்சைக்குரிய கோல் அடித்து வெறும் 4 நிமிடங்களில் மரடோனா மற்றொரு சிறப்புமிக்க கோலை அடித்தார்.

மைதானத்தின் நடுப்பகுதியில் தன்னிடம் கிடைத்த பந்தை இங்கிலாந்து அணியின் உலகத்தரம் வாய்ந்த 5 டிஃபென்டர்களை (பீட்டர் பியர்ட்ஸ்லி, பீட்டர் ரீட், டெர்ரி புட்சர், க்ளென் ஹோடில், டெர்ரி ஃபென்விக்) மீறி 60 யார்டு தூரத்தை வெறும் 11 நொடிகளில் மின்னல் வேகத்தில் கடந்து கோல் அடித்தார். அது, அந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக அழைக்கப்படுகிறது.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் ஆர்ஜென்டீனா அணி கருநீல நிற ஜெர்ஸியை அணிந்திருந்தது. தற்போது 2026-ல் அதே நிற ஜெர்ஸியை அணியவிருப்பதன் மூலம் வரலாற்றின் ஞாபகங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த ஆர்ஜென்டீனா முடிவெடுத்துள்ளது.

கடவுளின் கை

1986 ஆம் ஆண்டு போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டீனாவும் இங்கிலாந்தும் உலகக்கோப்பை தொடரில் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

1998-ல் நடைபெற்ற போட்டி சமனில் முடிந்ததும் பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் ஆர்ஜென்டீனா அணி வென்றது. அந்தப் போட்டியிலும் கருநீல நிற ஜெர்ஸியை ஆர்ஜென்டீனா அணிந்திருந்தது.

பின்னர், 2002-ல் டேவிட் பெக்காம் அடித்த பெனால்டி கோலால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி தங்களது வழக்கமான ஜெர்ஸியை அணிந்திருந்தது.

இந்த முறை, அட்லாண்டாவில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களது பாரம்பரிய வெள்ளை ஜெர்ஸியும், ஆர்ஜென்டீனா அணி கருநீல நிற ஜெர்ஸியும் அணியவுள்ளது.

2026 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தங்களின் வழக்கமான சீருடையை அணிந்திருந்தனர். ஜோர்டான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தங்களின் மாற்று சீருடையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

summary

Argentina to change jerseys in the semi-final! There is a historical reason behind it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments