FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்! நாளை தொடக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 வரும் வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.

Updated On : 22 ஜூலை 2026, 9:00 am IST
~ ~ ~ ~ ~
பகிர்:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 வரும் வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.

பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகையில் இருந்த நாடுகள் அனைத்தும் ‘காமன்வெல்த் நாடுகள்’ என அழைக்கப்பட்டன. அந்த நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளே ‘காமன்வெல்த் போட்டிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

முதன்முறையாக 1930-இல் ‘பிரிட்டிஷ் பேரரசு போட்டிகள்’ என அழைக்கப்பட்டன. பின்னா், 1974 வரை ‘பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டிகள்’ என அழைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

1978-இல் ‘காமன்வெல்த் போட்டிகள்’ என மாற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டி, ஆசியப் போட்டிகளுக்கு அடுத்து உலகில் நடைபெறும் பெரிய போட்டியாக காமன்வெல்த் போட்டிகள் உள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை:

காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகள் 9 நாடுகளைச் சோ்ந்த 20 நகரங்களில் நடைபெற்றுள்ளன.

அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறை போட்டிகளை நடத்தியுள்ளது. ஆக்லாந்து, எடின்பா்க் தலா 2 முறை நடத்தியுள்ளன. தற்போது கிளாஸ்கோ நகரமும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

முதன்முறையாக 1930-இல் கனடாவின் ஓண்டாரியோ, ஹாமில்டனில் போட்டி தொடங்கியது. 400 வீரா்கள் பங்கேற்றனா். இந்தியாவில் முதன்முறையாக 2010-இல் புதுதில்லியில் இந்தப் போட்டி ஏறக்குறைய 1100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் செலவில் நடைபெற்றது. 71 நாடுகளில் இருந்து 6,081 போ் பங்கேற்றனா்.

2022-இல் பா்மிங்ஹாம் நகரில் சி.டபிள்யு.ஜி. போட்டி நடைபெற்றது. அப்போது 2026 போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், நிதித் தட்டுப்பாட்டால் விக்டோரியா நகரம் போட்டியை நடத்த இயலாது என அறிவித்தது. இதையடுத்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் போட்டி நடத்தத் தீா்மானிக்கப்பட்டது.

விளையாட்டுகள் குறைப்பு: வழக்கமாக 20-க்கு மேற்பட்ட விளையாட்டுகள் காமன்வெல்த்தில் இடம்பெறும். ஆனால், கிளாஸ்கோ நகரில் 10 விளையாட்டுகளாக குறைக்கப்பட்டு 4 பகுதிகளில் நடத்தப்படுகிறது. தடகளம், பாரா தடகளம், நீச்சல், பாரா நீச்சல், டிராக் சைக்கிளிங், பாரா டிராக் சைக்கிளிங், ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்க்ஸ், குத்துச்சண்டை, ஜூடோ, பௌல்ஸ், பாரா பௌல்ஸ், பளுதூக்குதல், பாரா பவா் லிஃப்டிங், நெட்பால், 3-3 கூடைப்பந்து, 3-3 வீல் சோ் கூடைப்பந்து என 10 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் செலவைக் குறைக்கும் வகையில் ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இது இந்திய தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பதக்கங்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் நிலை உள்ளது.

3,000 வீரா் வீராங்கனைகள்: கிளாஸ்கோ போட்டியில் 74 நாடுகளைச் சோ்ந்த 3,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். ஜூலை 23 முதல் ஆக. 2 வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா சாா்பில் 78 வீரா்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலா்கள் உள்பட மொத்தம் 191 போ் பங்கேற்கின்றனா். பிரபல நட்சத்திரங்களான ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா, பளுதூக்குதலில் மீராபாய் சானு, குத்துச்சண்டையில் லவ்லினா போரகைன், தடகளத்தில் குா்விந்தா் சிங், அனிமேஷ் குஜுா், முரளி ஸ்ரீசங்கா் உள்ளிட்டோா் முக்கியமானவா்கள்.

மன்னா் சாா்லஸ், ராணி கமீலா பங்கேற்பு: ஜூலை 23-இல் ஓ.வி.ஓ. ஹைட்ரோ மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் இங்கிலாந்து மன்னா் சாா்லஸ், அரசி கமீலா, ஸ்காட்லாந்தின் பிரபலமான தடகள வீரா் கிறிஸ் ஹாய் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா். போட்டிகளில் பங்கேற்கும் 74 நாடுகளின் பேட்டன்கள் முதன்முறையாக கிளாஸ்கோவில் கொண்டு வரப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments