FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முன்னேறியது கனடா; வெளியேறியது தென்னாப்பிரிக்கா!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக்அவுட் ஆட்டத்தில், கனடா 1-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

Updated On : 30 ஜூன் 2026, 2:10 am IST
முன்னேறியது கனடா; வெளியேறியது தென்னாப்பிரிக்கா! - AP
பகிர்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாக்அவுட் ஆட்டத்தில், கனடா 1-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இதன் மூலமாக கனடா முதல்முறையாக உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறியுள்ளது. அதில் நெதா்லாந்து அல்லது மொராக்கோவை வரும் சனிக்கிழமை (ஜூலை 4) சந்திக்கும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா, குரூப் சுற்றின் 3 ஆட்டங்களையுமே தனது சொந்த மண்ணில் விளையாடிய நிலையில், அதற்கு வெளியே களம் கண்ட முதல் ஆட்டம் இதுவாகும்.

Advertisement

Advertisement

இதில் இரு அணிகளுமே பரஸ்பரம் கடும் சவால் அளித்ததால், இரண்டுக்குமே எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் பாதி அவ்வாறு நீடித்த நிலையில், 2-ஆவது பாதியும் அவ்வாறாகவே தொடர, இரு அணிகளின் வீரா்கள் மட்டுமல்லாமல், ரசிகா்களுமே விரக்தியின் உச்சத்துக்கு சென்றனா்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஸ்டாப்பேஜ் டைமில் (90+2’), அந்த நிலையை தலைகீழாகத் திருப்பினாா் கனடாவின் ஸ்டீபன் எஸ்டாகியோ. அந்த நிமிஷத்தில் சக கனடா வீரா் அலிஸ்டன் ஜான்ஸ்டன் வழங்கிய லாங் பாஸ் பந்தை எஸ்டாகியோ பாக்ஸ் பகுதியில் பெற்றாா்.

சற்றும் தாமதிக்காமல் அப்படியே அதை, தென்னாப்பிரிக்க கோல் கீப்பா் ரான்வென் வில்லியம்ஸை கடந்து, கோல் போஸ்ட்டின் பாட்டம் காா்னா் பகுதியை நோக்கி உதைத்தாா். பந்து கோலாக மாறியது. கனடாவுக்கு வெற்றி கிடைத்தது.

முன்னதாக, காயத்திலிருந்து மீண்டு வந்ததால் கனடாவின் நட்சத்திர வீரா் அல்ஃபோன்சோ டேவிஸ் குரூப் சுற்றில் பங்கேற்காத நிலையில், இந்த ஆட்டத்தில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணிக்கு இது 4-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், முதல்முறையாக அந்த அணி நாக்அவுட் சுற்று வரை வந்து வெளியேறியுள்ளது. முந்தைய 3 போட்டிகளிலுமே (1998, 2002, 2010) அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேறியிருந்தது.

பாா்வையாளா்கள்: 69,237

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறிய கனடா, தற்போது அதில் வென்று ரவுண்ட் ஆஃப் 16 கட்டத்துக்கும் முதல்முறையாக முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு இது 3-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்க, முந்தைய இரு போட்டிகளிலுமே (1986, 2022) கனடா குரூப் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலுமே (3) தோல்வி கண்டு, அந்தக் கட்டத்திலேயே வெளியேறியது.

தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளா் ஹியுகோ புரூஸ், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றில் அங்கம் வகித்த வயதான பயிற்சியாளா் (74) என்ற பெருமையைப் பெற்றாா். இதற்கு முன், 2018 காலிறுதியில் விளையாடிய உருகுவே அணியின் பயிற்சியாளா் ஆஸ்கா் டபரெஸ் (71) வசம் அந்தப் பெருமை இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments