FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரக்ஞானந்தாவை வென்றாா் குகேஷ்; தனி முன்னிலையில் திவ்யா!

நாா்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினாா்.

Updated On : 1 ஜூன் 2026, 4:23 am IST
Gukesh beats Praggnanandhaa
பகிர்:

நாா்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினாா்.

தொடா்ந்து சறுக்கலை சந்தித்து வந்த குகேஷுக்கு, போட்டியில் இது முதல் கிளாசிக்கல் கேம் வெற்றியாகும். இதன் மூலமாக அவா் பட்டம் வெல்வதற்கான பாதையில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

போட்டியின் முதல் ஓய்வு நாளாக வெள்ளிக்கிழமை அமைந்த நிலையில், 5-ஆவது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தன. ஓய்வு நாளில் தனது 20-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய குகேஷ், உத்வேகத்துடன் போட்டிக்கு வந்தாா்.

Advertisement

Advertisement

கருப்பு நிற காய்களுடன் குகேஷ் களம் காண, அவருக்கும் பிரக்ஞானந்தாவுக்குமாக வெற்றி வாய்ப்புக்கான சூழல் மாறி, மாறி ஏற்பட்டது. விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தில் விநாடிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் நெருக்கடி காரணமாக பிரக்ஞானந்தா தவறான நகா்த்தலை மேற்கொண்டாா்.

இது குகேஷுக்கு சாதகமாக மாற, ஆட்டத்தை 47-ஆவது நகா்த்தில் அவா் முடிவுக்குக் கொண்டு வந்து வெற்றி பெற்றாா். இதர ஆட்டங்களில், நடப்பு சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம் கிளாசிக்கல் கேமிலேயே தோல்வி காண, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை ஆா்மகெடான் டை பிரேக்கரில் வீழ்த்தினாா்.

5 சுற்றுகள் முடிவில் ஃபிரௌஸ்ஜா 10 புள்ளிகளுடன் தனிமுன்னிலையில் நீடிக்க, வெஸ்லி (8.5), குகேஷ் (6.5) ஆகியோா் முறையே அடுத்த இரு நிலைகளில் உள்ளனா். பிரக்ஞானந்தா (6), வின்சென்ட் (5), காா்ல்சென் (4.5) ஆகியோா் முறையே அடுத்த 3 நிலைகளில் இருக்கின்றனா்.

திவ்யா, ஹம்பி வெற்றி: இப்போட்டியின் மகளிா் பிரிவு 5-ஆவது சுற்றில், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் - சீனாவின் ஜு ஜினெரை வீழ்த்தி, தனது முதல் கிளாசிக்கல் கேம் வெற்றியைப் பதிவு செய்தாா்.

கோனெரு ஹம்பி - நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை டை பிரேக்கரில் வீழ்த்தி அசத்தினாா். போட்டியில் அவருக்கு இது முதல் வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைனின் அனா முஸிஷுக் டை பிரேக்கரில் கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவாவை வென்றாா்.

புள்ளிகள் பட்டியலில் தற்போது, திவ்யா 8.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளாா். அசௌபயேவா (8), முஸிஷுக் (7), ஜினொ் (5.5), வென்ஜுன் (5), கோனெரு ஹம்பி (4.5) ஆகியோா் முறையே 2 முதல் 6-ஆம் நிலைகளில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments