FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2: தமிழ்த் தேர்வில் எதிர்பாராத வினாக்களால் மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. மொழிப் பாடம் முதல் தாள் தேர்வில், எதிர்பாராத சில வினாக்கள் இடம் பெற்றிருந்ததால்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. மொழிப் பாடம் முதல் தாள் தேர்வில், எதிர்பாராத சில வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் தமிழ்த் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காகத் தமிழகம், புதுவையில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ -மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
 இந்த நிலையில், முதல் நாளான வெள்ளிக்கிழமை மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணி முதல் வரத் தொடங்கினர். 9.45 மணிக்குத் தேர்வு அறைக்குச் சென்ற அவர்களுக்கு 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
 இதையடுத்து, வினாத்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடங்களும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்பட்டன. பின்னர், காலை 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
 தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் சிலர், தமிழ் மொழிப் பாடம் முதல் தாள் தேர்வு எதிர்பார்த்ததை விட சற்று கடினமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
 கோவை பி.எஸ்.ஜி. சர்வஜன மேல்நிலைப் பள்ளித் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர் க.கெளசிக் கூறும்போது, ஒரு மதிப்பெண் வினாப் பிரிவில் இருந்த 16 வினாக்களில் 3 வினாக்கள் கடினமாக இருந்ததாகக் கூறினார். வினா எண்கள் 38, 41, 47 ஆகியவை மாதிரி வினாப் பகுதியில் இருந்து கேட்கப்படாமல் புதிதாக கேட்கப்பட்டிருந்ததால் தனக்கு கடினமாக இருந்ததாகக் கூறினார்.
 மற்றொரு தனியார் பள்ளி மாணவி ரூபஸ்ரீ கூறும்போது, இந்தத் தேர்வில் பாடங்களுக்குள் இருந்து அதிக வினாக்கள் கேட்டிருந்தனர். அந்த வினாக்களும் சிந்தித்து பதிலளிக்கும்படியாக அமைந்திருந்தன. அதேபோல், "பொருத்துக' பிரிவு முற்றிலும் புதிய வினாக்களுடன் இருந்தது என்றார்.
 இது குறித்து தமிழாசிரியர்கள் கூறும்போது, ஒரு மதிப்பெண் வினாக்களில் 38, 41, 43, 47 ஆகியவை பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தன. "பொருத்துக' பகுதியில் எதிர்பார்த்திராத வினாக்கள் இருந்தன. அதேபோல், மனப்பாடச் செய்யுள் பகுதியில் கேட்கப்பட்டிருந்த "மதுரைக் கலம்பகப் பாடல்' பொதுத் தேர்வில் இதுவரை கேட்கப்படாததாக இருந்தது. இருப்பினும், இந்தச் செய்யுள் அரையாண்டுத் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக இந்தத் தேர்வு, புத்தகத்தில் உள்ள மாதிரி வினாக்கள், மாதிரி வினா-விடை புத்தகம், பழைய வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி பெற்றவர்களுக்கு சற்று கடினமானதாகவும், பாடங்களை முழுமையாகப் படித்தவர்களுக்கு எளிதானதாகவும் இருக்கும். மேலும், சராசரி மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்களைப் பெறுவது சிரமம் என்றனர் அவர்கள்.
 தேர்வறை முறைகேடு - 2 பேர் பிடிபட்டனர்: இதற்கிடையே, மொழிப் பாடம் முதல் தாள் தேர்வுக்குப் பதிவு செய்திருந்த 8 லட்சத்து 39,697 பள்ளி மாணவர்கள், 42,347 தனித் தேர்வர்களில், கிருஷ்ணகிரியில் ஒரு தனித் தேர்வரும், கடலூரில் ஒரு பள்ளி மாணவரும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதற்காகப் பிடிபட்டதாகத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments