மதிய உணவுத்திட்ட முட்டைக் கொள்முதல் வழக்கு: தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில் மனு
மதிய உணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென
மதிய உணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு, முன்பு மாவட்ட அளவில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது மாநில அளவில் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு முட்டைகளை கொள்முதல் செய்கிறது. இந்தப் புதிய முறை, வெளிப்படையான ஒப்பந்த விதிகளுக்கு எதிராக உள்ளது.
மேலும், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசிடம் மனு அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தலைமைச் செயலர், சமூக நலன், மதிய உணவுத் திட்ட முதன்மைச் செயலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் இயக்குநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தள்ளுபடி செய்ய வேண்டும்: அதில், மாநில அளவிலான முட்டை கொள்முதல் குறித்து சமூக நலன், சத்துணவு திட்டத்துறை வெளியிட்ட அரசாணை செல்லும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், மனுதாரர் தவறான தகவல்களைக் கூறி, நீதிமன்றத்தை திசை திருப்ப முயல்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிகாரிகளின் நேர்மைத் தன்மையை குறித்தும் தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
இதேபோல, முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை அரசிடம் இருந்து பெற்றுள்ள தனியார் நிறுவனமும் பதில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.