FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்குகள்: சி.பி.ஐ. விசாரிக்க ஆளுநர் ஒப்புதல்

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.,) விசாரிப்பதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:19 am IST
பகிர்:


சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.,) விசாரிப்பதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார்.
காவல் துறை பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு ஆளுநர் தனது ஒப்புதலை அளித்துள்ளதாகவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவு விவரம்:-
பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், சிலை கடத்தல் தொடர்பான சிறப்புக் குழுவின் விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், குறிப்பிடத்தக்கதாகும்.
சில சிலைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அவற்றை பணத்தால் மட்டுமே மதிப்பிட முடியாது. சிலை திருட்டு வழக்குகளில் சில வழக்குகள் மாநிலங்களுக்கு இடையேயும், சர்வதேச அளவிலும் விசாரணை நடத்தப்படும் அளவில் உள்ளன. சில வழக்குகளில் சிலைகள் வெளிநாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலை திருட்டு தொடர்பான சில வழக்குகளில் மத்திய அரசு நிறுவனங்களான சுங்கம், வெளி விவகாரங்கள் துறை, உள் துறை, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் போன்றவற்றின் சாதகமான ஒத்துழைப்பு தேவையானதாக இருக்கிறது. 
சிலை திருட்டு வழக்குகளில் திறமையான, சார்பற்ற அமைப்புகளைக் கொண்ட விசாரணை தேவையாக உள்ளது. இதுபோன்ற அமைப்புகளின் விசாரணையால்தான், உயர் நீதிமன்றம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
எனவே, சிறப்புக் குழுவினர் விசாரித்து வரும் சிலை திருட்டு தடுப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும், இனி எதிர்காலத்தில் பதிவிடப்படும் வழக்குகளையும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றலாம் என பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநரின் பரிந்துரையை ஏற்று அதற்கான அரசு உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டுமென காவல் துறை இயக்குநரும் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
நீதிமன்றத்தில் தெரிவிப்பு: சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றுவது குறித்த முடிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
அதன்படி, தமிழக அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு மற்றும் உத்தரவுகள் தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ.-க்கு ஒப்படைப்பு: இந்தச் சூழ்நிலையில், பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநரின் பரிந்துரையை ஏற்று, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments