தேர்தல் அரசியலில் இருந்து சித்தராமையா விலகல்!
தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளது தொடர்பாக...
பெங்களூரு: தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் களம் "ஊழல் மயமாகிவிட்டதால்", 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாகத் தொடர்ந்து ஒலிப்பேன் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சித்தராமையா,
Advertisement
Advertisement
வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னைக் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன் என்று கூறினார்.
கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்கு தேவையான நிதியை வழங்கி வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை என அவர் தெரிவித்தார்.
வயது மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவையும் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிட்ட சித்தராமையா, எனக்கு இப்போது 79 வயதாகிறது, அடுத்த தேர்தல் வருவதற்கு நமது காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் (கா்நாடக மாநில அரசின்) இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் எனக்கு 81 - 82 வயதாகிவிடும். அந்த காலக்கட்டத்தில் இப்போது இருப்பது போல எனது உடல்நிலை வலுவாக இருக்காது. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.
2028 பேரவைத் தேர்தலின்போது எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக இருக்கும்.
1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், நான் தனது கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது மனசாட்சிக்கு விரோதமாகவோ செயல்படவில்லை என்பதில் தனக்கு மனநிறைவு உள்ளதாகக் கூறிய அவர், இன்றைய அரசியலில் ஊழல் அதிகரித்துவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இங்கு இடமில்லை. இத்தகைய சூழலில் தேர்தலில் போட்டியிட்டால் பணத்தைக் கொடுத்து வாக்குகள் வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்று சித்தராமையா கூறினார்.
மேலும், இன்றைய அரசியல் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை காணப்பட்டாலும், வயது, உடல்நிலை போன்ற காரணங்களால் , எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன் என்று அவர் கூறினார்.
மக்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், மக்களிடம் தனக்கு ஒரு கடமை இருப்பதாகவும், 50 ஆண்டு காலமாக கர்நாடக மக்கள் என்னை அவா்களில் ஒருவராக அன்புடனும் ஆதரவுடனும் அரவணைத்தனர். அவா்களுக்கு எப்போதும் கடன்பட்டுள்ளேன். அவர்களுக்காக மீதமுள்ள எனது வாழ்நாளை பொதுச்சேவையில் அர்ப்பணிக்கவுள்ளேன் அதன் மூலம் மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிகளுக்குக் குரல் கொடுக்கப்போவதாக கூறினார்.
2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா, அந்தத் தோ்தல்தான் தனது கடைசித் தோ்தல் என தெரிவித்திருந்தாா். அந்தத் தோ்தலில் வெற்றிṭயும் பெற்றாா். அப்போது, தோ்தலில் இனி போட்டியிட போவதில்லை எனவும், ஆனால் அரசியலில் இருப்பேன் எனவும் கூறினார்.
கடந்த மே மாதம் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தபிறகு பேசிய சித்தராமையா, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர காங்கிரஸ் மேலிடம் முன்வந்ததாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும், மாநில அரசியலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாகவும், தேசிய அரசியலில் ஆா்வம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Former Karnataka Chief Minister Siddaramaiah has announced retirement from electoral politics, saying he will not contest the 2028 Assembly elections as the political field has become "corrupted".
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.