FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தலைவர்கள் கண்டனம்

சிலை கடத்தல் வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், பாஜக மாநிலத்

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 2:32 am IST
பகிர்:


சிலை கடத்தல் வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மு.க.ஸ்டாலின்: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியிருப்பது வியப்பளிக்கிறது. அதிலும், குறிப்பாக உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் இப்படியொரு திடீர் நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே தெரிகிறது. இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ள நிலையில், இதுபோன்ற முடிவை அரசு எடுத்திருப்பதில் ஏதோ மர்மம் உள்ளது.
வைகோ: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்றும், சரியாகச் செயல்படவில்லை என்றும் கூறி சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் விசாரணையை தொடர்ந்து நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தொடுத்துள்ள மனுவைத் திரும்பப் பெற வேண்டும்.
பழ.நெடுமாறன்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்ட ராஜராஜன் சிலையிலிருந்து, வேறு பல கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளையும் முறையாகக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அறநிலையத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த வழக்கில் மேலும் பல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாகக் கருத வேண்டியுள்ளது. அரசின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
தமிழிசை சௌந்தரராஜன்: குறுகிய காலத்திலேயே பல முறைகேடுகளைக் கண்டுபிடித்து சிலைகளையும் பொன் மாணிக்கவேல் மீட்டிருக்கிறார். ஆனால், அவரது விசாரணை சரியில்லை என்பது யாரையோ காப்பாற்ற நினைப்பதாகவே தோன்றுகிறது. திடீரென்று சி.பி.ஐ. விசாரணை என்பது வழக்கை முடக்குவதற்கான முயற்சியாகும். தனிப்படையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பக்கபலமாக இருந்து உதவி செய்ய வேண்டிய அரசு, இப்படி எதிர்ப்பு நிலையை கடைப்பிடிப்பதால் உண்மை குற்றவாளிகள் சிக்காமல் போய்விடுவார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments