FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் குறித்து முதல்வர் விமர்சனம் செய்வதால் புதுவை வளர்ச்சிக்குப் பின்னடைவு

புதுவை துணைநிலை ஆளுநர் குறித்து முதல்வர் விமர்சனம் செய்து வருவதால், மாநில வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டு வருவதாக, முதல்வர்

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:37 am IST
பகிர்:

புதுவை துணைநிலை ஆளுநர் குறித்து முதல்வர் விமர்சனம் செய்து வருவதால், மாநில வளர்ச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டு வருவதாக, முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதில் அளித்துள்ளார்.
ஆளுநரின் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.
புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண் பேடி தனது உத்தரவுகளைப் பின்பற்றாத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைதளத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். 
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, ஆளுநருக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே, அதிகாரிகள் ஆளுநரின் தன்னிச்சையான உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்தார். 
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
புதுவை ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்பு மற்றும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள், இதுபோன்ற எதிர்மறை அறிக்கைகளால் குறைத்து மதிப்பீடப்படுகின்றன. இதுபோன்ற கருத்து புதுவை முன்னேற்றத்தின் வேகத்தைப் பாதிக்கும் என்பதை முதல்வர் உணர்ந்து கொண்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. புதுவையின் முன்னேற்றம் அவருக்கு முதன்மையானதாக இருந்தால் இதுபோன்ற கருத்துகளை வெளியிட மாட்டார். ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்புகள் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. யாருக்காவது அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவற்றைப் படிக்க வேண்டும். 
உச்ச நீதிமன்றம் தில்லி யூனியன் பிரதேசத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவு புதுவைக்கு பொருந்தாது எனக் கூறியுள்ளது. நான் புதுவையில் 26 மாதங்களுக்கு மேலாகப் பணிபுரிந்து வருகிறேன். கூட்டு முயற்சிகளை முதல்வர் பலவீனப்படுத்தாமல் ஆதரவு அளித்து இருந்தால், அனைத்து வகையிலும் தேசிய அளவில் புதுவை முதல் இடத்தில் இருந்திருக்கும்.
ஆளுநர் அலுவலகம் எப்போதும் சட்ட விதிகளைப் பின்பற்றி மக்களுக்கு அதிகப்பட்ச சேவையை வழங்கி மக்கள் மாளிகையாக இருந்து வருகிறது. மூத்த அதிகாரிகள் தங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் அதிகாரம் படைத்தவர் ஆளுநர் என்றே அறிந்துள்ளனர். எனவே, அவர்களின் இறுதி மதிப்பீடு ஆளுநர் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சிறப்பாகப் பணி புரிந்ததற்கான சான்றைப் பெற அதிகாரிகள் விரும்பினால், பணியின் மூலம் அதை நிரூபிக்க வேண்டும். 
முதல்வரின் இதுபோன்ற கருத்துகள் புதுவையின் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது. அதிகாரிகளை குழப்புகிறது. நமது செயல் திறன் நிலைத்திருக்க, நமது நோக்கத்துக்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். 
புதுவையின் எதிர்காலத்துக்கு கடந்த காலப் பகுதிகளைச் சரி செய்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். இது கிரண் பேடியின் உத்தரவு அல்ல. ஆளுநர் அலுவலக உத்தரவு. இது ஓர் அரசியலமைப்பு நிலை, அரசியலமைப்பின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments