ஊழியர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி: தனியார் நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிறுவனம், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாகக் கூறி தனது ஊழியர்கள் 700 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப்
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிறுவனம், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாகக் கூறி தனது ஊழியர்கள் 700 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 50 -க்கும் மேற்பட்டோர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை, ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலையில் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சார்பில் தமிழகத்தில் 70 கிளைகளும், தெலங்கானாவில் 60 கிளைகளும் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றது எனக் கூறி தமிழகம் முழுவதிலும் ஒரு கிளைக்கு 10 பேர் வீதம் சுமார் 700 பேரைப் பணியில் சேர்த்தனர். வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இதன் கிளைகளில் கிளை மேலாளர், உதவி மேலாளர், பர்சனல் ஆபிஸர், கிளார்க் என பணிக்குத் தகுந்தவாறு முன் வைப்புத்தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் பெற்றுள்ளனர். அதில் பாதித் தொகையை வேலையை விட்டுச் செல்லும்போது தருவதாக ஒப்பந்தப் பத்திரமும் கொடுத்தனர். இதை உண்மை என்று நம்பி நாங்களும் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பணம் செலுத்திவிட்டு ஊதியம் இல்லாமல் பணியாற்றி வந்தோம். ஆனால், திடீரென அந்த நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் சில நாள்களுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டன.
இதுகுறித்து ஒவ்வோர் ஊரில் உள்ள கிளையிலும் பணியாற்றிய ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கச் சென்றோம். ஆனால் அவர்கள் புகார்களைப் பெற மறுத்ததுடன் சென்னையில்தான் புகார் அளிக்க வேண்டும் என்றனர். இந்த நிலையில், நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளோம்.
இதனிடையே, இந்த நிறுவனத்தின் தலைவரான கரூரைச் சேர்ந்த முகமது ரஃபீக் (52) , உதவித் தலைவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுரேஷ் (50), நிர்வாகக் குழுவைச் சேர்ந்த கௌதம் ஆகியோரை மோசடி வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநிலம், கம்பம் நகர காவல் துறையினர் ஜூலை 17 -ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
ஆகவே, இவர்களிடம் உரிய விசாரணை நடத்தி எங்களது வைப்புத் தொகை, நிலுவை ஊதியம் ஆகியவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.