FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீலகிரி மாவட்டத்தில் 12 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 12 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 12 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011-இல் தடை விதித்து உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, இந்தியா முழுவதும் யானை வழித்தடங்களில் கட்டுமானப் பணிக்குத் தடை கோரி, ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: யானை வழித்தடம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த செயல் திட்டத்தை ஆராய்ந்தோம். தற்போதைய சூழலில் உணவகங்களுடன் கூடிய ரிசார்ட்டுகள் தொடர்பாக மட்டும் கருத்தில் கொள்கிறோம். மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில், இதுபோன்று 39 ரிசார்ட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மனுதாரர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
அனுமதியில்லாமல் வணிகம் சார்ந்த கட்டடங்கள் இயங்கி வருவது மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள செயல் திட்டத்தில் தெரிய வருகிறது. அவற்றை மூடவும் அல்லது சீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையை 48 மணி நேரத்தில் மேற்கொள்ளும்படி மாநில அரசின் வழக்குரைஞரிடம் தெரிவித்துள்ளோம். ரிசார்ட்டுகளுக்கான அனுமதி, அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் 48 மணி நேரத்தில் சமர்ப்பிக்க 12 ரிசார்ட்டுகளுக்கும் அவகாசம் அளிக்கப்படுகிறது.
அவர்கள் அளிக்கும் ஆவணங்களில் தகவல்கள் முழுமையாக இல்லாமல் இருந்தாலோ, அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததாகத் தெரிய வந்தாலோ, அந்த ரிசார்ட்டுகளை உடனடியாக மாவட்ட ஆட்சியர் மூடி, சீல் வைக்க வேண்டும். 
ஆட்சியரின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள நபர்கள் தேவையான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சரிபார்ப்புக்காக இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அளிக்க வேண்டும். இந்த வழக்கு அக்டோபர் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments