பெரிய கோயில் கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்
பாசியால் பொலிவிழந்து வந்த தஞ்சாவூர் பெரியகோயில் கோபுரங்களைத் தூய்மைப்படுத்தும் பணி அண்மையில் தொடங்கியது.
பாசியால் பொலிவிழந்து வந்த தஞ்சாவூர் பெரியகோயில் கோபுரங்களைத் தூய்மைப்படுத்தும் பணி அண்மையில் தொடங்கியது.
ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையைப் பறைசாற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் (பெருவுடையார் கோயில்) உலக மரபுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயில் கோபுரங்கள், மழை, புறாக்களின் எச்சம் காரணமாகப் பாசி படிந்து கருப்பு நிறமாக மாறுகிறது.
ஏற்கெனவே, இக்கோயிலில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது அறிவியல் முறையில் கோபுரங்கள், மதில்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், தூய்மைப் பணி தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இக்கோயில் கோபுரங்களில் அறிவியல் முறையிலான தூய்மைப்படுத்தும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தது:
இக்கோயில் கோபுரங்கள் சுற்றுச்சூழல் காரணமாக பாசி படிந்து கருப்பு நிறமாக மாறுகிறது. எனவே, இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், முதல் கட்டமாகத் தேங்காய் நாருடன் கூடிய தூரிகை மூலம் சுத்தம் செய்யப்படும்.
பின்னர், அமோனியா என்ற வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து தூய்மைப்படுத்தப்படும். மேலும், பூஞ்சாணம், காளான்கள் வளராமல் இருப்பதற்கான பூச்சு செய்யப்படவுள்ளது. மழை நீரால் கற்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ஹைட்ரோபோபிக் என்ற சிலிக்கான் அடிப்படையிலான பூச்சு செய்யப்படும். இப்பணியில் கற்கள் சிதையாத அளவுக்கு உள்ள இலகுவான வேதிப்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது, நுழைவு வாயிலில் உள்ள மராட்டியர் கோபுரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து, கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், கருவறைக் கோபுரம், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்கள் தூய்மை செய்யப்படவுள்ளன.
இப்பணியில் தனித்திறன் பெற்ற, அனுபவமிக்க சுமார் 35 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து, பெரிய கோபுரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
கட்டமைப்பைச் சிதைக்காமல் மிகவும் கவனமாக இப்பணியை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாலும், மழை உள்ளிட்ட பருவச் சூழ்நிலையைப் பொருத்தும் இப்பணி முடிவடையும் காலம் அமையும் என்றனர்.
இந்த நுணுக்கமான பணி மூலம் கோபுரத்தின் செந்நிறத் தோற்றம் வெளிப்படும். இதனால், கோபுரத்தின் அழகும் மிளிரும் என்பது நிச்சயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.