26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு: பெரியாற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள இடுக்கி அணை 2,405 அடி உயரம் கொண்டது. தற்போது கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,399 அடியாக உள்ளது.
பலத்த மழை பெய்து வருவதால் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இடுக்கி அணையைத் திறக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இடுக்கி அணையை நிர்வகித்து வரும் கேரள மாநில மின்சார வாரியம் வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டது.
இடுக்கி அணைக்கு மதகுகள் கிடையாது. இடுக்கி அணைக்கு பின்புறமாக 10 கிலோ மீட்டர் தொலைவில் செறுதோணி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 5 மதகுகள் உள்ளன. இதில் நடுவில் உள்ள மதகு வழியாக விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் சோதனை ஓட்டமாக திறந்து விடப்பட்டது.
கடந்த 1992 ஆம் ஆண்டுக்கு பின், 26 ஆண்டுகள் கழித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் செறுதோணி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் பெரியாற்றில் இணைவதால் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் இடுக்கி மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தை அடுத்துள்ள எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவம், கப்பல், விமானப்படை, கடலோரக்காவல் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எம்.ஐ. 17 , ஏ.சி.எச்., என இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.