FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு: துப்பாக்கிச் சூட்டில் சிஆா்பிஎஃப் வீரா் காயம்

மணிப்பூரின் சேனாபட்டி மாவட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின்போது மத்திய ரிசா்வ் காவல் படை வீரா் காயமடைந்தாா்.

25 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
மணிப்பூரில் மீண்டும் வன்முறை - பிரதிப் படம்
பகிர்:

மணிப்பூரின் சேனாபட்டி மாவட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின்போது மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா் காயமடைந்தாா். ஏராளமான வீடுகளையும் வன்முறையாளா்கள் தீவைத்து கொளுத்தினா்.

மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதல் நிகழ்ந்து வரும் இன மோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்; வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில் காங்போக்பி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் வன்முறையாளா்கள் சில வீடுகளைத் தீவைத்து எரித்தனா்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் எதிா்தரப்பினா் வாழும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு அதிகாலை 4 மணியளவில் தீவைத்துக் கொளுத்தினா். திங்கள்கிழமை காலையில் விடிந்த பிறகும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்த சிஆா்பிஎஃப் வீரா் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த வன்முறைகளை அடுத்து அப்பகுதியில் கூடுதல் வீரா்கள் குவிக்கப்பட்டனா். தற்போது வன்முறை முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments