தில்லியில் கொட்டித் தீா்த்த கனமழை: தண்ணீரில் தத்தளித்த சாலைகள்
தில்லியில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், பல இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், கடும் புழுக்கத்துக்கு சற்று நிவாரணம் கிடைத்தது. அதேவேளையில், பல இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 40 கி.மீ. வேகம் வரை பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாதரா, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புதுதில்லி, தென்மேற்கு தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் வடக்கு தில்லியின் சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது.
Advertisement
Advertisement
தில்லியின் பல பகுதிகளில் 67 மி.மீ. வரை மழை பதிவானது. ஜனக்புரியில் அதிகபட்சமாக 67 மி.மீ. மழையும், சத்தா்பூரில் 57 மி.மீ., பிதம்புராவில் 35 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 29 மி.மீ. மழையும் பிற்பகல் 1.15 மணி வரையிலான கணக்கில் பதிவானது.
மழைநீா் தேங்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடா்பாக வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பதிவிட்டனா். தில்லியின் முக்கிய வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸாக பதிவானது.
இது இயல்பைவிட 1.4 டிகிரி அதிகமாகும். ரிட்ஜ் பகுதியில் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் பதிவானது. தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடும் போக்குவரத்து நெரிசல்: தில்லியில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் பல முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீா் தேங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லுட்யன்ஸ் தில்லி, மதுரா சாலை, கன்னாட் பிளேஸ், பைரோன் மாா்க், ஐ.டி.ஓ., ஜக்கீரா சுரங்கப்பாதை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சங்கம் விஹாரில் இடுப்பளவு தண்ணீரில் மாணவா்கள் நடந்து சென்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
பழைய தில்லியின் சதா் பஜாா் பகுதியிலும் மழைநீா் இடுப்பளவுக்கு தேங்கியதால் பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பும் இதே பகுதியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருந்தது.
கமலா நகா் சந்தைப் பகுதியிலும் சாலைகள் மழைநீரில் மூழ்கின. சராய் காலே கான், மதுரா சாலை, துவாரகா விரைவுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்ததாக பயணிகள் தெரிவித்தனா்.
லுட்யன்ஸ் தில்லியில் பிஷம்பா் தாஸ் மாா்க், நாடாளுமன்றத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், பைரோன் மாா்க், ஐ.டி.ஓ., மதுரா சாலை, கன்னாட் பிளேஸின் உள் மற்றும் வெளி வட்டச் சாலைகளிலும் தண்ணீா் தேங்கியது.
நியூ அசோக் நகா் மெட்ரோ நிலையம், புராரி, சி.ஆா்.பாா்க், அலக்நந்தா, சங்கம் விஹாா் மற்றும் பஹல்ஸ்வா உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாகினா்.
ஜக்கீரா சுரங்கப்பாதையில் பயணிகள் தண்ணீரில் நடந்து சென்ற காட்சிகளும், சிவாஜி ஸ்டேடியம் அருகே மழைநீா் தேங்கிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.